சென்னை | மனிதநேய மக்கள் கட்சி கொடுத்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!
செய்தியாளர்: ஆனந்தன்
இம்மாத தொடக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான 'அமரன்' படம் வெறுப்பின் விதைப்பு. இப்படம், வரலாற்று திரிப்பு” என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
அதில் கடந்த 7ம் தேதி சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய எச்.ராஜா, “மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேசத்துரோகிகள். இவர்களை போன்றவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும். அமரன் திரைப்படத்தை எதிர்ப்பதாக கூறி, தேச துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நம் நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும்” என பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில், “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் தேச துரோகி என்று பேசிய எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜா தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் விதமாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்கீழ் சென்னை விமான நிலைய போலீசார் நான்கு பிரிவுகளின்கீழ் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர். அதில்
BNS 192- கலவரத்தை உண்டாக்கும் பேச்சு,
BNS 196 - மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்து, நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்,
BNS 353 - அவதூறு பரப்புதல்
BNS 353 (2) - மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மின்னணு வழிமுறைகள் உட்பட, தவறான தகவல், வதந்தி அல்லது ஆபத்தான செய்திகளைக் கொண்ட அறிக்கை அல்லது அறிக்கையை வெளியிடுதல், பரப்புதல்
ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.