ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு | 'போராட்டத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமை" - நீதிபதி!
செய்தியாளர்: இ.சகாய பிரதீபா
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திருச்சியில் பிப்ரவரி 04ல் நடைபெற்ற மாநில அளவிலான கூட்டத்தில் அனைத்து தாலுகா தலைநகரங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை பிப்ரவரி 25ஆம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் அரசு ஊழியர்கள் இவ்வாறு வேலை நிறுத்தம் நடத்துவது சட்ட விரோதமானது என தடை செய்து உள்ள நிலையில், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் சட்ட விரோதமானது. இவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், அது அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பிரச்னை. சாலை மறியல் நடைபெற்றால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், மருத்துவ தேவைகளுக்காக செல்வோர், தினசரி வேலைக்குச் செல்பவர்கள் என வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாதவர்கள் பாதிப்பு அடைவார்கள்.
மேலும் சாலை மறியலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் திருமண மண்டபங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு குடிநீர் போன்ற வசதிகள் அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது. எனவே பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ - ஜியோ நடத்த உள்ள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடும்க் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மீது குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யவும், உரிய விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, 'போராட்டத்தில் ஈடுபடுவது ஒரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. முறையாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து அனுமதி பெறுவது மட்டுமே அவசியம். ஆகவே, மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. போராட்டத்தின் போது சட்டவிரோதமான செயல்களை செய்தால் நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறின்றி மனுதாரர் கோரும் நிவாரணத்தை இவ்வாறு வழங்க இயலாது என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.