காட்டுயானை தாக்கி கணவன் பலி: அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வடமாநில பெண்!

காட்டுயானை தாக்கி கணவன் பலி: அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வடமாநில பெண்!
காட்டுயானை தாக்கி கணவன் பலி: அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வடமாநில பெண்!

காட்டுயானை தாக்கி கணவன் இறந்த நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தவிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு உதவ மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமீத் ஓரான் (26) - நாகினா குமாரி (22) தம்பதியினர். இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 1 ஆண்டிற்கு முன்பு கூடலூரில் உள்ள தனியார் தேயிலை தோட்ட நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர். ஏற்கெனவே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மே மாதம் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி நாகினா குமாரி குழந்தை பெற்று நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையில் இருந்துள்ளார்.


அன்று இரவு கடைக்குச் சென்ற சுமீத் ஓரான், பொருட்களை வாங்கி விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சாலையில் நடந்து வந்த அவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மறுதினம் உயரிழந்தார். குழந்தை பிறந்து 10 தினங்களில் தந்தை இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதற்கட்டமாக அரசின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக நாகினா குமாரியிடம் வழங்கப்பட்டது. வாரிசு சான்றிதழ் ஒப்படைத்த பின் மீதமுள்ள 3.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ளவில்லை. ஜார்கண்டில் இருந்து வரும்போது சான்றிதழ்கள் எதையும் அவர்கள் எடுத்து வரவில்லை. நாகினாதான் இறந்த சுமீத் ஓரானின் மனைவி என்பதற்கு அவரிடம் ஆதாரம் எதுவும் தற்சமயம் இல்லை. அவரிடம் தற்சமயம் ஆதார் அட்டை மட்டுமே உள்ளது. அதில் மட்டுமே சுமீத் ஓரானின் மனைவி என குறிப்பிடபட்டுள்ளது. இந்த ஆவணத்தை கொண்டு மீதமுள்ள இழப்பீடு தொகையை வனத்துறையிடம் கேட்ட போது, வாரிசு சான்றிதழ் இருந்தால் மட்டுமே இழப்பீட்டை தர முடியும் எனக்கூறி விட்டனர்.

இந்த நிலையில் நாகினாவின் நிலையை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சங்கீதா தற்போது அந்த குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளார். அவரும் அவரின் நண்பர்களும் இணைந்து நாகினா மற்றும் அவரது குழந்தைகளை கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை இவர்கள் செய்கின்றனர். தேயிலை தோட்ட நிர்வாகம் தரப்பில் நாகினா தங்குவதற்கு வீடு வழங்கபட்டுள்ளது. குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டியுள்ளதால் நாகினா வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளார்.


இந்த நிலையில் அவரிடம் வாரிசு சான்றிதழ் இல்லாத காரணத்தால் அரசிடமிருந்து மீதமுள்ள இழப்பீடு தொகை 3.5 லட்சத்தை பெற முடியாமல் உள்ளார். வாரிசு சான்றிதழ் பெற வேண்டும் என்றால் அவர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும். நாகினாவின் கணவர் வீட்டு தரப்பில் எதிர்ப்பு இருப்பதால் தான் அங்கு செல்வது பாதுகாப்பானது இல்லை எனவும் நாகினா தெரிவித்துள்ளார். எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தனக்கு கிடைக்க வேண்டிய நிவாரண தொகையை பெற்று தந்தால், அதனை கொண்டு சொந்த ஊர் திரும்பி தனது பெற்றோர்களுடன் தங்கி கொள்வேன் என கூறியுள்ளார்.


இதுகுறித்து கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் கேட்ட போது, பாதிக்கபட்ட பெண்னை நேரில் விசாரித்து, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து உரிய உதவியை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com