சிஏஏ போராட்டம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவு நிறுத்திவைப்பு

சிஏஏ போராட்டம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவு நிறுத்திவைப்பு
சிஏஏ போராட்டம்:  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவு நிறுத்திவைப்பு

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நேற்றைய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் நடத்தும் போராட்டத்தை தடுக்கக் கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த போராட்டம் காரணமாக பள்ளிக் குழந்தைகள், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், போராட்டங்கள் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், அனுமதிக்கப்படாத ஒரு இடத்தில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் போராட்டம் நடத்த எவருக்கும் உரிமையில்லை எனத் தெரிவித்தனர். போராட்டம் நடைபெறும் சாலையில் பள்ளி, மருத்துவமனைகள் அமைந்துள்ளதாகவும், இந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளதால், திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

திருப்பூர் காவல்துறைக்கு பிறப்பித்த உத்தரவு தமிழக டிஜிபி-க்கு பிறப்பித்த உத்தரவாக கருதி காவல்துறை நடவடிக்கை எடுக்க தொடங்கியதால், சில வழக்கறிஞர்கள் மீண்டும் முறையிட்டனர். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இன்று மீண்டும் விசாரித்தனர். அப்போது திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நேற்றைய உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம் அமைதியான வழியில் போராடிவரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் மார்ச் 11-ஆம் தேதி கேட்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com