சேலத்தில் கஸ்தூரி பாய் திறந்து வைத்த பாலம்; நூறு ஆண்டுகளை கடந்த வரலாறு - விழா எடுத்த மக்கள்

நூற்றாண்டுகளைக் கடந்த கஸ்தூரிபாய் காந்தி பாலத்திற்கு சேலம் மாநகர மக்கள் விழா எடுத்துக் கொண்டாடினர்.
salem bridge
salem bridgept web

சேலம் திருமணிமுத்தாற்றின் மீது கட்டப்பட்ட பாலம் கடந்த 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது மகாத்மா காந்தியுடன் சேலம் வருகை தந்த அவரது மனைவி அன்னை கஸ்தூரிபாய் காந்தி இந்த பாலத்தை திறந்து வைத்தார்.

நூற்றாண்டை நிறைவு செய்துள்ள இந்த பாலத்திற்கு சேலம் மாநகர மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் விழா எடுத்து கொண்டாடினர். சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் இரண்டாவது அக்ரஹாரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மட்டுமின்றி குறிப்பாக வணிகர்கள் திருமணிமுத்தாற்றை கடந்து வர்த்தகப் பகுதியான இரண்டாவது அக்ரஹாரத்திற்கு செல்வதற்கு ஏதுவாக கட்டப்பட்ட இந்த பாலும் இந்நாள் வரையிலும் உறுதியுடன் பயன்பாட்டில் உள்ளது.

நூற்றாண்டை கடந்த இந்த பாலத்தின் பெருமையை போற்றும் விதமாகவும் அன்னை கஸ்தூரிபாய் காந்தி கரங்களால் திறக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும் கொண்டாடப்பட்ட எந்த விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் பர்னபாஸ் அளித்த பேட்டியில், “ஆரம்ப காலத்தில் ஆற்றை கடந்து செல்வதற்கு பொதுமக்களும் கர்ப்பிணி பெண்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதனைப் போக்கும் விதமாக கிருஷ்ணராஜ் தேவ்சந்த் என்பவர் தனது வருமானத்தில் இந்த பாலத்தை கட்டி கொடுத்தார். அப்போது சேலம் வந்திருந்த கஸ்தூரிபாய் அம்மையார் கரங்களால் திறக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் விதமாக அவரது பெயரே இந்த பாடத்திற்கு வைக்கப்பட்டது” என்றார்.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் எழில்விழியன் கூறுகையில், “பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இந்த பாலத்தின் பெருமை தெரியாமல் இருந்தபோது கல்வெட்டு ஒரு நாள் கண்ணில்பட்டது. அதன் பிறகு கல்வெட்டு இருந்த இடத்தை தூய்மைப்படுத்தி அன்னை கஸ்தூரிபாய் அம்மையார் திறந்து வைத்தார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்று விழா எடுக்க முயற்சித்தும் பாம்பன் பாலத்திற்கு விழா எடுப்பது போல சேலம் கஸ்தூரிபாய் பாலத்திற்கு இன்று விழா எடுக்கப்பட்டது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com