Hospitalpt desk
தமிழ்நாடு
தென்காசி: விளையாடிக் கொண்டிருந்தபோது மின் கம்பத்தை தொட்ட சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
சங்கரன்கோவில் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: டேவிட்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புது சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அபிலேஷ், 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அபிலேஷ், நேற்றிரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டின் அருகே இருக்கும் மின்கம்பத்தை விளையாட்டாக பிடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
Housept desk
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அபிலேஷை மீட்டு கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அபிலேஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சுப்புலாபுரம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.