குஜராத்தை உலுக்கிய தீ விபத்து.. உயிரிழப்பு 27ஆக அதிகரிப்பு

குஜராத்தில், பொழுதுபோக்கு பூங்காவின் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்
குஜராத்புதிய தலைமுறை

குஜராத்தில், பொழுதுபோக்கு பூங்காவின் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

ராஜ்கோட் பகுதியில் உள்ள டிஆர்பி என்ற பொழுதுபோக்கு பூங்காவில், இரண்டு அடுக்கு தகர கொட்டகையில் விளையாட்டு மையம் இயங்கி வந்துள்ளது. இங்கு 30-க்கும் அதிகமான குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக தங்களது பெற்றோருடன் நேரம் செலவிட்டுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீயால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது.தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீ விபத்தில் சிக்கி 12 வயதுக்குட்பட்ட 4 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். விளையாட்டு மையத்திற்கான நுழைவுவாயில்கள் குறுகலானது என்பதால், தீ விபத்தின்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் தவித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விளையாட்டு மையத்திற்கு ராஜ்கோட் மாநகராட்சியிடம் இருந்து தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தீ விபத்து குறித்து விசாரிப்பதற்காக மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கப்பட நிலையில், டிஆர்பி விளையாட்டு மையத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்
’அடப்பாவிகளா.... இப்படியா திருடுவீங்க?'- சினிமா பாணியில் நடந்த திருட்டு

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும், 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்தர் படேல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீ விபத்து குறித்து கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com