முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21), சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதி கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு, இன்று 7வது நாளாக மருத்துவர்களின் அறிவுரையின்படி ஓய்வெடுத்து வருகிறார். அங்கிருந்தே தனது பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென இன்று அதிகாலையில் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை, கோட்டூர் புரத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு பாதுகாப்புத் தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், முதல்வரின் வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்தபின் செய்தி புரளி என தெரியவந்தது. செல்போன் எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.