பீகார்|மயங்கி விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; ஆம்புலன்சிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை !
பீகார் மாநிலம், புத்த கயா மாவட்டத்தில் உள்ள மிலிட்ரி போலீஸ் மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளம் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதில் நடந்த உடல்தகுதி தேர்வின்போது, 26 வயது பெண் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இப்பெண்ணுக்கு அந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.
அரைமயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் ஊழியா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்ததும், தனக்கு நோ்ந்த கொடூரம் குறித்து காவல் துறையினரிடம் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் டெக்னீசியன் அஜித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். ஆனால், தன்னை 4 போ் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளம்பெண் கூறியுள்ளாா்.
இதனையடுத்து, சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், நிதீஷ் குமாா் ஆட்சி அகற்றப்பட வேண்டும். ராட்சதா்களின் கையில் இருந்து பிகாரை விடுவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
ஜூலை 24 அன்று நடந்த இந்தச் சம்பவம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.