’யாருக்கும் ஆதரவாக பாஜக வாக்களிக்காது..’ - நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகள் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும் நிலையில், ஒரே இடம் பெற்றிருந்தாலும் பா.ஜ.க. எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம், ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் பங்கேற்க மாட்டோம், எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்; மக்களின் தீர்ப்பை மதிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள தேர்தலாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 இருக்கிறது. 1977-க்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் மாற்றாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய அளவிலான வெற்றியை பெற்றிருக்கிறது. அதேசமயம், தவெக 108 இடங்களை தனிப்பெரும்பான்மையாக வென்றிந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கையாக அது இல்லாததால், ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காமலேயே இருந்து வருகிறார்.
இதற்கிடையில் தான், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து தவெக கோரி வருகிறது. அந்தக் கட்சிகள் இன்று முடிவுகளை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளன. அதேசமயம், அதிமுக கூட்டணியில் 53 இடங்களும் திமுக கூட்டணியில் 68 இடங்களும் இருக்கும் சூழலில் இந்த இரண்டு கூட்டணிகளும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அதற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும், சென்னையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ-க்கள் மே-10 வரை சென்னையிலேயே தங்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்தசூழலில் தான், திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 1 இடத்தைப் பெற்றுள்ள பாஜக அக்கூட்டணியில் இருந்து விலகுமா? என கேள்வி எழுந்து வருகிறது.
இந்தசூழலில் தான், இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பா.ஜ.க. அதே நோக்கத்துடன் சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டது. இருப்பினும் தேர்தல் முடிவுகளை கட்சியானது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும், அதிகாரத்தையும் மக்கள் பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும் தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமாற மதிக்கிறோம். எனவே தமிழக பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக எந்த ஒரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது நேரடி பங்களிப்பையும் மேற்கொள்ளவில்லை. ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரனின் இந்த அறிக்கை அதிமுக வில் இருந்து பாஜக வெளியேறுவதற்கான சமிக்ஞையா? எனக் கேள்வி எழுந்திருகிறது.

