முண்டாசு கவிஞன்... புதுக்கவிதைக்கு பாதையிட்ட ‘அமரன்’... மகாகவி பாரதியார் பிறந்தநாள் இன்று!
தடைகளை மீறவும், விதிகளை உருவாக்கவும், இலக்கணங்களை உடைத்து புதிய இலக்கியங்களை படைக்கவும் வல்ல மகாகவியின் பிறந்தநாள் இன்று. 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த மகாகவி பாரதி, தனது படைப்புகள் வழியே இன்றளவும் அமரனாக வாழ்கிறார்.
'முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்....'
- என்று பாரதத்தாயை போற்றிப் புகழ்வார் பாரதி...
‘பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன் - தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை’
- என்று பாரதத்தாயின் சீற்றத்தை பாடுவார்..
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
- என்று சுதந்திர பள்ளு பாடுவார்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என மாதரை போற்றுவார்...
மகாகவி, தேசிய கவி என்று போற்றப்படும் சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடுவதென்பது தமிழைக் கொண்டாடுவதற்கான தருணம்.
தேச விடுதலை உணர்வூட்டிய பாடல்களை எழுதிய கவிஞனை பாராட்டும் தருணம்.. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளமொழி என பன்மொழி புலமை பெற்றிருந்த பாரதி, யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்று பெருமிதத்துடன் முழங்கியவர்.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், விடுதலை வேட்கையைத் துண்டிய போராளி, இலக்கணங்களை உடைத்து புதுக்கவிதைக்கு பாதையிட்ட முன்னோடி, பாரதி.. இன்றும் மகாகவி என்ற போற்றுதலுக்குரிய பாரதியாரின் பாடல்கள், உயிர்ப்புடனும், துடிப்புடனும் எழுத வரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி.. தொலைநோக்கு சிந்தனை செய்வதற்கான துண்டுகோல்.. மொழிக்கு தொண்டு செய்து, நாட்டுக்கும் சேவை செய்த மகாகவிக்கு, அவரின் பிறந்தநாளில் தலைவணங்குவோம்..