கிராமங்களில் வீதியுலா வரும் பண்ணாரி அம்மன் - பவானி ஆற்றில் பவனி வந்த சப்பரம்
செய்தியாளர்: டி.சாம்ராஜ்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 24 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இந்நிலையில், தற்போது பண்ணாரி அம்மன், சப்பரத்தில் எழுந்தருளி சுற்றுவட்டார கிராமங்கள் தோறும் வீதியுலா நடைபெற்று வருகிறது. பவானி சாகர், தொட்டம்பாளையம், இக்கரை தத்ததப்பள்ளி கிராமங்களில் வீதியுலாவுக்குப் பின் பண்ணாரிஅம்மன் சப்பரம் பவானி ஆற்றை கடந்து இக்கரைத் தத்தப்பள்ளி கிராமத்துக்கு வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க அம்மனை வரவேற்றனர். அம்மன் சப்பரம் வரும் பாதையில் படுத்திருந்த பக்தர்களை தாண்டியபடி சப்பரம் சென்றது.
இதைத் தொடர்ந்து இக்கரை தத்தப்பள்ளி கிராமத்திலிருந்து பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து அக்கரை தத்தப்பள்ளி, வெள்ளியம்புதூர் கிராமத்துக்கு சென்றது. தொடர்ந்து உத்தண்டியூர், அய்யன் சாலை, ராமாபுரம், பகுத்தம்பாளையம், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.