“சாதி வகுத்தவன் நீசன் என்றார் ஐயா.. ஆளுநர் வரலாற்றை திரிக்கிறார்” - பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்

அய்யா வைகுண்டர், நாராயணனின் அவதாரம் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய நிலையில், ஆளுநர் வரலாற்றை திரிக்கிறார் என அய்யா வழி தலைமை பதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் தெரிவித்துள்ளார்.
பால பிரஜாபதி அடிகளார்
பால பிரஜாபதி அடிகளார்pt web

“அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாறு” புத்தக வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நூலினை வெளியிட்டு நிகழ்சியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “அய்யா வைகுண்டர் நாராயணின் அவதாரம். வைகுண்டர் தோன்றிய சமூக கலாசார காலக்கட்டம் என்பது, சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்ப்பட்ட காலக்கட்டம். சனாதன தர்மத்தை காக்கவே 192ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார். ஐரோப்பாவிற்கு அவர் செல்லும் முன்பே கிறிஸ்துவம் இந்தியாவிற்கு வந்தது.

வெளியில் இருந்து இங்கு வந்த சிலர் (கிழக்கிந்திய, பிரிட்டிஷ்) அனைவரும் சமம் எனும் சனாதன தர்மத்தின் கோட்பாட்டை அழித்தார்கள். சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ராமர், கிருஷ்ணர், வள்ளலார், அய்யா வைகுண்ட நாராயணன் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர். கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட இலக்கு மதமாற்றம் செய்வதே.

பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக திகழ்ந்தது. மக்கள் சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். இந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவை அடிமைப்படுத்த சவலாக இருந்தது. இந்தியாவை அடிமையாக்க சனாதன தர்மத்தை அழிக்க பிரிடிஷ் முடிவெடுத்தது. இந்தியாவை ஆள்வதற்கு கிறிஸ்துவ மதமாற்றம் என்பதை கொள்கையாக பிரிட்டிஷ் அரசு கொண்டது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அய்யா வழி தலைமை பதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கன்னியாகுமரி மாவட்டம் சாமியாத்தோப்பில் பேசியுள்ளார். அது...

“அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதாக சொல்லிவிட்டு, வரலாற்றை திரித்து ஆரிய கோட்பாட்டற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் பேசுயுள்ளது வருந்தத்தக்கது.

அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண் பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்படுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

அவரை நாராயணனின் அவதாரம் என்று ஆளுநர் கூறுகிறார். எல்லா புராணங்களிலும் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர் அய்யா. அய்யா சிவ சிவா அரோகரா என்று நாங்கள் சொல்கிறோம். நராயணர் அவதாரம் என்று வழித்தேங்காயை எடுத்து கோவிலில் உடைக்க கூடாது. உண்மையில் ராமனே நாராயணன் அவதாரம், அவர் சமத்துவத்தை எடுத்துரைத்தவர். அவரையும் யாரும் சனாதனத்திற்குள் கொண்டு வர முடியாது. குமரிக்கண்டம் மூழ்கி இமயமலை உருவாகியது. இவர்கள் இமயமலையை முன்னிலைபடுத்தி கூறுகின்றனர்.

வைகுண்டர் கூறிய தென் கடலை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினால் அதனை ஏற்றுக் கொள்வோம். அதை விட்டுவிட்டு வடநாட்டில் இருப்பதை இவர்கள் கூறினால் ஏற்றுக்கொள்ள முடியாது. சாதியை வகுத்தவனை நீசன் என்று கூறுகிறார் அய்யா. அப்படிப்பட்ட இடத்தில் சனாதனத்தை ஆதரித்தவர் அய்யா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் மக்களாக அய்யா வழி மக்கள் இருக்கிறார்கள். ஆளுநர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார். ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும், ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com