BJP-ன் மாஸ்டர் மூவ்.. தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் நியமனம்.. யார் இந்த பைஜெய்ந்த் பாண்டா..?
அடுத்த ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில், தான் முக்கியமானதாக கருதும் மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கும் பாஜக, தமிழ்நாட்டின் பொறுப்பாளராக பைஜெய்ந்த் பாண்டாவை நியமித்துள்ளது. யார் இந்த பாண்டா? அவருடைய நியமனத்தின் பின்னணி என்ன?
யார் இந்த பாண்டா?
பைஜெயந்த் பாண்டா அடிப்படையில் ஒடிசாவைச் சேர்ந்தவர். தேசிய அரசியலில், மதிநுட்பமிக்கவராக பார்க்கப்படுவர். அமெரிக்காவில் பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் பட்டம்பெற்றவர். பல தேசிய நாளிதழ்களில் நடுப்பக்கக் கட்டுரைகளை எழுதியவர். தனது அரசியல் பயணத்தை நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தின் வழி தொடங்கினார் பாண்டா. 2000இல் கட்சியில் அவர் இணைந்த வேகத்தில் பாண்டாவை மாநிலங்களவை வழி நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார் அன்றைய ஒடிசாவின் முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக். அப்போது தொடங்கி டெல்லியின் முக்கியமான அரசியல் தலைவர்களுடனும் குறிப்பாக பாஜக தலைவர்களுடனும் நெருக்கமான உறவில் இருந்தார் பாண்டா.
ஒருகட்டத்தில் நவீன் பட்நாயக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடும், பாஜகவுடனான நெருக்கமும் இணைந்து 2018இல் பிஜு ஜனதா தளத்திலிருந்து பாண்டா வெளியேற்றப்பட வழிவகுத்தன. 2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜகவில் இணைந்தார் பாண்டா. மிக விரைவில் கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பாண்டாவை நிமித்தனர் மோடி- ஷா.
அடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒடிசாவின் கேந்த்ரபரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கினர். இந்த முறை மக்களவை மூலம் நாடாளுமன்றத்துக்குச் சென்றார் பாண்டா. மோடி – ஷா ஜோடியிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றவர் பாண்டா என்கிறது. டெல்லி பாஜக வட்டாரம். 2021இல் அஸாம் சட்டமன்றத் தேர்தல் முதல் 2025இல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரை பாண்டாவிடம் கொடுக்கப்பட்ட தேர்தல் பொறுப்புகள் எல்லாவற்றையுமே திறம்பட கையாண்டவர் அவர் என்பதையும், எங்கே எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், சூழலுக்கேற்ப வியூகங்களை அமைத்து, காய்களை நகர்த்துவதில் வல்லவர் என்றும் பாண்டாவைப் பற்றி கூறுகிறார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தைக் கையாளும் பொறுப்பை பாண்டாவிடம்தான் மோடியும் ஷாவும் ஒப்படைத்திருந்தார்கள் எனில், அவர் மீது எத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தமிழக பாஜகவுக்குள் நிலவும் குழப்பங்கள், பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவுக்குள் நிலவும் குழப்பங்கள், இரு கட்சிகளின் தோழமைக் கட்சிகளில் நிலவும் குழப்பங்கள்… இவற்றையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவரவும், திமுகவை வீழ்த்தவும் ஒரு பெரிய கை தேவைப்படுகிறது; பாண்டாதான் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று பிரதமர் மோடியிடம் அமித் ஷா கூறியதாகவும், மோடியும் அதை ஆமோதித்ததாகவும் தெரிகிறது.
”திரைக்குப் பின்னால் செயல்படும் அமைதியான வியூகவாதி” என்று வெளியே பெயரெடுத்திருந்தாலும், மிகுந்த அதிரடியாகவும் ஆட்டத்தையே மாற்றியமைக்கும் வகையிலும் காய்களை நகர்த்தக் கூடியவர் பாண்டா. தமிழ்நாட்டு அரசியல் களத்தில், பாண்டாவின் காய் நகர்த்தல்கள் என்னவாக இருக்கும்; மோடி - அமித் ஷாவின் கணக்குகள் என்ன; எத்தகு விளைவுகளை இவை உண்டாக்கும் என்பதை வரவிருக்கும் காலம் நமக்கு உணர்த்தும்!