விருதுநகர் | வெறும் 680 கி எடையுடன் பிறந்த குழந்தை.. 76 நாட்கள் சிகிச்சை.. அசத்திய மருத்துவர்கள்!
செய்தியாளர் : A.மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் வரலொட்டியை சேர்ந்தவர்கள் பிரியதர்ஷினி - சுரேஷ்குமார் தம்பதி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரியதர்ஷினிக்கு பனிக்குடம் உடைந்து 6 மாத குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அக்குழந்தை கடந்த 76 நாட்கள் தீவிர பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தது. பிறக்கும் போதே வெறும் 680 கிராம் எடை கொண்ட குறைமாத மற்றும் மிகவும் எடை குறைந்த குழந்தை (extreme preterm, low birth weight baby) இன்று 1.300 கிலோ கிராம் எடையுடன் நலம் பெற்று டிஸ்சார்ச் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயசிங், அதிதீவிர சிகிச்சை மற்றும் நவீன மருத்துச்சிகிச்சையின் மூலம், குழந்தையின் உயிரும், நலமும் காக்கப்பட்டுள்ளதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாகவும், குழந்தையின் தொடர் கண்காணிப்பு, சிறப்பான மருத்துவக் குழு, புரிந்துணர்வு பெற்ற செவிலியர்களின் ஈடுபாடு மற்றும் பெற்றோரின் உறுதி ஆகியவை இந்த சிறப்பான முடிவிற்கு காரணமாக இருந்ததாகவும், இது போன்ற சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளின் திறமை மற்றும் மக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் என்று தாம் உட்பட மருத்துவர்கள் அனைவரும் நம்புவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழந்தையின் தாய் பிரியதர்ஷினி, குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தபோது ஒருவாரமாக தாய்ப்பால் கொடுக்காமல் தாய்ப்பால் வங்கிக்கு கொடுத்ததாகவும், பின்னர் குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுத்ததாகவும் 76 நாட்கள் தொடர் கண்காணிப்பில் தனது குழந்தைக்கு மருத்துவம் பார்த்து தற்போது நல்ல நிலையில் வீடு திருப்புவதாகவும் இதற்காக மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.