13 ஆண்டுக்குப் பிறகு அதிரடி மாற்றம்! அதிரிபுதிரியாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!
செய்தியாளர் - ராஜ்குமார். ர
ஒரு காலத்தில், ஆட்டோ என்பது அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலில் புகுந்து செல்வது, பேருந்துகள் செல்ல முடியாத குறுகிய தெருக்களுக்குச் செல்வது, பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கே கொண்டு சேர்ப்பது எனப் பல வகைகளில் ஆட்டோக்கள் மக்களுக்குப் பெரிதும் உதவின. இதனால், ஆட்டோ ரிக்ஷாக்கள் மக்கள் மத்தியில் பிரபலமான போக்குவரத்து சேவையாக மாறின. ஆனால், தற்போது பைக் டாக்ஸிகளின் வருகை மற்றும் ஆட்டோ கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பலரும் ஆட்டோக்களில் பயணம் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இருப்பினும், சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோக்களுக்கான தேவை இன்றளவும் குறையவில்லை என்றே கூறலாம்.
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டண வரம்பை தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 1.8 கி.மீ. பயணத்திற்கான குறைந்தபட்சக் கட்டணம் ₹25 ஆக இருந்த நிலையில், தற்போது அது ₹50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ₹12 ஆக இருந்த கட்டணம், தற்போது ₹25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 2013-ஆம் ஆண்டு ஐந்து நிமிடக் காத்திருப்புக்கு ₹3.50 ஆக இருந்த கட்டணம், தற்போது நிமிடத்திற்கு ₹1 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இரவு நேரக் கட்டணத்தைப் பொறுத்தவரை, கடந்த 2013-ஆம் ஆண்டு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீதக் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த நேரம் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வழக்கமான கட்டணத்தைவிட 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மலைப்பாதைகளில் பயணிப்பதற்கான அடிப்படைக் கட்டணம் ₹60 ஆகவும், அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ₹30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண நிர்ணயத்தின்படி, இரண்டு கிலோமீட்டர் பயணத்திற்கு பகல் நேரத்தில் ₹55-ம், இரவு நேரத்தில் ₹83-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், மூன்று கிலோமீட்டர் பயணத்திற்கு பகல் நேரத்தில் ₹80-ம், இரவு நேரத்தில் ₹120-ம் வசூலிக்கப்படும். ஐந்து கிலோமீட்டர் பயணத்திற்கு பகல் நேரத்தில் ₹130-ம், இரவு நேரத்தில் ₹195-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பத்து கிலோமீட்டர் பயணத்திற்கு பகல் நேரத்தில் ₹255-ம், இரவு நேரத்தில் ₹383-ம் வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணத்தை இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஐந்து கிலோமீட்டர் பயணத்திற்கான ஆட்டோ கட்டணம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஐந்து கிலோமீட்டர் பயணத்திற்கான கட்டணம் ₹130 ஆக உள்ளது. தட்சிண கன்னடாவில் ₹120.50, மும்பையில் ₹90.77, பெங்களூருவில் ₹90, கேரளாவில் ₹82.50, தெலங்கானாவில் ₹77.60, டெல்லியில் ₹68.50 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண நிர்ணயத்திற்கு ஏற்ப, ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது மீட்டர்களை மாற்றியமைக்க போக்குவரத்துத் துறை ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மீட்டர்கள் மாற்றியமைக்கப்படும் வரை, ஆட்டோக்களில் புதிய கட்டண விவரங்கள் அடங்கிய அட்டையைப் பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண அட்டையில் க்யூஆர் குறியீடும் இடம்பெற்றிருக்கும். மீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தைவிடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்பட்டால், பயணிகள் 1800 425 5430 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உயர்த்தியுள்ள ஆட்டோ கட்டணத்தை ஆட்டோ தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன..
