ராமதாஸ், அன்புமணி சந்திப்பு... வலுவான கூட்டணிக்கு முயற்சிக்கிறதா பாஜக!
கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது.
கடந்த ஆண்டு நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனது பேரன் முகுந்தனை பாமகவின் இளைஞர் அணி தலைவராக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ். இந்த அறிவிப்புக்கு பிறகுதான் இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி குறித்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிறுவனர் ராமதாஸ். இனிமேல் கட்சியின் தலைவரும் நானே என்று அறிவித்தார் அவர் . அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்களையும் நீக்கி வந்தார் ராம்தாஸ் .
இந்த நடவடிக்கைகள் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாமகவின் முக்கிய தலைவர்கள் இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர பல முறை முயற்சித்தும் தற்போதுவரை எந்தவித சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளின் ஏற்பாட்டின் பேரில் தைலாபுரத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே இன்று காலை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி, அன்புமணியின் மகள் சஞ்சுத்ரா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பாமக முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சுமார் ஒரு மணிநேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தைலாபுரத்தில் இருந்து அன்புமணி புறப்பட்டுச் சென்ற நிலையில், இதன்பிறகு தற்போது ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இவருடன் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக கடந்த முறை அமித்ஷா சென்னை வந்தபோது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை அவரின் இல்லத்திற்கே சென்று சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே பாமக , பாஜக கூட்டணியில் இருக்கும்பட்சத்தில், பாமக உட்கட்சி விவகாரம் காரணமாக பாஜக கூட்டணியில் குளறுபடி ஏற்படாமல் இருக்க, தற்போது குருமூர்த்தி , அதிமுக சைதை துரைசாமி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.