குண்டர் தடுப்பு சட்டம் |ஞானசேகரனை விடுவிக்கக்கோரி அவரது தாய் வழக்கு.. நீதிமன்றம் ஒத்திவைப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தனது மகன் மீதான பாலியல் வழக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை காரணம் காட்டி காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் அடைத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் அவர் மனுவில் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிப்பதுடன், குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லக்ஷ்மிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.