"நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்தனர்” - பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்! நெல்லையில் கொடூர சம்பவம்

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் இருவர்மீது சிறுநீர் கழித்து தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள்pt web

நெல்லையில் மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியைக் கேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாதியைக் கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். குளித்துவிட்டு வீடு திரும்பிய போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இளைஞர்களை தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் எந்த சாதி என கேட்டு, பட்டியலின சமூகத்தினர் என தெரிந்துகொண்ட பின் இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்துள்ளனர்.

இருவரையும் மீட்ட ஊர்மக்கள் அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் அறிந்து வழக்கு பதிவு செய்த திருநெல்வேலி மாநகர் தச்சநல்லூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பொன்னுமணி என்பவர் தனது நண்பர்களுடன் இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பொன்னுமணியின் நண்பர்களான, பொன்மணி (25) வயது, நல்லமுத்து (21), ஆயிரம்(19), ராமர்(22), சிவா(22), லட்சுமணன் (20) உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். கைதானவர்கள் மீது வன்கொடுமை வழக்கு, வழிபறி கொள்ளை, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யபட்டுள்ளது.

ஆயுதங்களோடு சுற்றிய கும்பல் கொலை திட்டத்தோடு மாநகருக்குள் வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மாநகர நுண்ணறிவு பிரிவு முறையாக கண்காணிப்புகளை மேற்கொள்ள மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறைகள் தடுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com