சவுக்கு சங்கர் வீடு சூறை.. “கடும் நடவடிக்கை தேவை..” என அரசியல் தலைவர்கள் கண்டனம் | நடந்தது என்ன?
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னையில் வீடு உள்ளது. இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மைப் பணியாளரை சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவரது வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, அதிமுக
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும். இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை, பாஜக
அதுபோல் இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “@SavukkuOfficial அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என பதிவில் தெரிவித்துள்ளார்.
வேல்முருகன், தவாக
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் துப்புரவு பணியாளர்கள் என்கின்ற பெயரில் புகுந்த ரவுடிகள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும், வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியும்,கழிவு நீரை வீடு முழுதும் ஊற்றியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் இது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜனநாயக நாட்டில் அவர் முன்வைக்கும் கருத்துக்களின் மீது யாருக்கு வேண்டுமானாலும் மாற்றுக் கருத்து இருக்கலாம். அதனை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமேயொழிய இதுபோன்று வன்முறையில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல. இந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருப்பினும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று தமிழ்நாடு அரசசையும் தமிழ்நாடு காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து சவுக்கு சங்கர், “என் அம்மாவிடம் பேசியதை வைத்து, அவர்கள் (துப்புரவுப் பணியாளர்கள்) வந்திருப்பார்கள் என்று யூகித்தேன். துப்புரவுப் பணியாளர்களுக்கு வாகனங்கள் வாங்கித் தருவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது. துப்புரவுத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவியை, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கொள்ளையடுத்துள்ளார் என்று அவர்களுக்கு ஆதரவாகத்தான் நான் பேசியிருந்தேன். நிச்சயமாக, எந்த இடத்திலும் நான் துப்புரவுத் தொழிலாளிகளுக்கு எதிராக எதுவுமே பேசவில்லை. என் வீட்டுக்குள் வந்தவர்கள் எல்லோரும் வாளிகளில் மலம், சாணி போன்றவற்றை அள்ளிவந்து ஊற்றிவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டைச் சூறையாடியுள்ளனர். என் அம்மாவை தாக்க முயன்றுள்ளனர். எல்லா இடங்களிலும் பொருட்கள் சேதமாகியுள்ளன.
மதுரவாயலில் உள்ள என்னுடைய சொந்த வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதை திறப்பதற்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன். தற்போது இந்த வீட்டில் 4-5 மாதங்களாகத்தான் தங்கி இருக்கிறேன். இந்த வீட்டு முகவரி ஒருவருக்குமே தெரியாது. காவல் துறையைத் தவிர, இந்த வீட்டுக்குள் துப்புரவுப் பணியாளர்கள் வந்து இறங்குகிறார்கள் என்றால், திட்டமிட்டு அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். காவல் துறை எதற்கு என்று சுற்றி வளைக்க வேண்டும்? சென்னை மாநகர ஆணையர் அருண் அவர்களின் உத்தரவின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது என்று நான் உறுதியாக கூறுகிறேன். வந்திருந்த ஆண், பெண் என அத்தனை பேருமே மதுபோதையில் இருந்தனர்.
இவ்வளவு நாட்கள் சட்டப்பூர்வமாக பொய் வழக்குகள் போட்டு எனக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று என்னுடைய தாயாருக்கும் என்னுடைய உயிருக்கும் என்னுடன் இருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது, எனக்கு நேரிடையாக விடுக்கப்பட்ட கொலை மிரட்டலாகத்தான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன், விசிக
விசிக தலைவர் திருமாவளவன் தன்னுடைய கண்டன பதிவில், “சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.
எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் இந்த செயலை எதிர்த்து இருந்துள்ளார்.