சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது.. ஜன.7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!
நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது தொடர்பாக விசாரணைக்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பினார். கடந்த 16ஆம் தேதி சவுக்கு சங்கர் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
விசாரணையின்போது காவல்துறையைப் பற்றி அவதூறாகவும் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தும் தனது சவுக்கு மீடியா சேனலில் காவல்துறையை அவதூறு செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை மற்றும் அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட சவுக்கு சங்கர் அவரது யூடியூப் சேனலான சவுக்கு மீடியா மற்றும் தொகுப்பாளர்கள் மாலதி மற்றும் லியோ ஆகிய நான்கு பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மதுரை சிறையில் இருந்த youtube சவுக்கு சங்கரை சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே தேனி மாவட்ட போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் தற்போது இரண்டாவது முறையாக youtuber சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.