விஜய் இதைத்தான் உருவாக்குகிறார்! முதல்வர் குறித்து அட்லீ பேசியது என்ன? வைரலாகும் மேடைப் பேச்சு!
சென்னையில் நடைபெற்ற ‘பத்தா’ பட விழாவில், சர்ச்சை குறித்து மௌனமாக இருந்த விஜய் சேதுபதியை விட, அட்லீயின் மேடைப் பேச்சே கவனம் குவித்தது. தன் வெற்றிக்கு விஜயின் ஆதரவே காரணம் என நன்றியுடன் கூறிய அவர், ஊர் பேசும் விமர்சனங்களை நம்பி வாழ்வது முட்டாள்தனம் என்றும், யாரின் பேச்சையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி, லிஜிமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்தா திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சமீபத்தில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விழா மேடையில் அந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி எதுவும் பேசவில்லை. ஆனால் மேடையை கவனிக்க வைத்தது அட்லீயின் பேச்சுதான். “இன்று நான் அணிந்திருக்கும் இந்த பேண்ட், சட்டை எல்லாமே என் உழைப்பால் கிடைத்தது என்று நினைத்தாலும், விஜய் அண்ணன் இல்லையென்றால் இதற்கான வாய்ப்பே கிடைத்திருக்காது. அதற்காக அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டவன்” என்றும் தெரிவித்தார்.
அதோடு , “ஊர் வாயை அடக்க முடியாது. ஆனா ஊர் வாயில் விழுந்துட்டு, அதையே நம்பி வாழ்ந்துட்டு போறது முட்டாள்தனம். ஊர் ஆயிரம் பேசும். அதனால் எவன் என்ன சொல்றான்னு கேட்காத. நீ போக வேண்டிய இடத்துக்கு போய்கிட்டே இரு. வாழ்க்கை நீ போக வேண்டிய இடத்துக்கு உன்னை அழைத்துச் செல்லும். யார் பேச்சையும் கேட்காத” என்றும் கூறினார்.
தொடர்ந்து, “இந்த சோசியல் மீடியால அவரு இவர சொல்றாரு, இவரு அவர சொல்றாருனு அதெல்லாம் ஒன்னும் இல்ல. சொல்லணும்னா நேரா சொல்லிக்கலாம். அடுத்த தலைமுறை அரசியலில் ஆர்வமாக இருக்க ஒரே காரணம் விஜய் அண்ணாதான். முந்தைய தலைமுறையில் சட்டசபையை நான் பார்த்ததில்லை. ஆனா இன்னைக்கு சட்டசபையில் என்ன நடக்குதுன்னு 5 வயசு குழந்தை கூட பார்க்குது. அதற்குக் காரணம் விஜய் அண்ணாதான். அவர் உறுதியான தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சிலர் ‘அரசியல் நமக்கானது இல்லை’ என்று கூறுவார்கள். ஆனால் அரசியல் நமக்கானதுதான்” எனப் பேசினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

