”அடுத்த தலைமுறைக்கு ஆபத்தான அரசியல்..” அட்லீ பேச்சுக்கு போஸ் வெங்கட் பதில்!
அட்லீ அரசியல் குறித்து கூறிய கருத்துக்கு பதிலளித்த போஸ் வெங்கட், அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் அறிஞர் அண்ணா முதல் மு.க.ஸ்டாலின் வரை உள்ள சிந்தனைகளில் இருக்க வேண்டும், தற்போதைய தவறான அரசியல் பெரிய சமூக சீரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவிருக்கும் பாத்தா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அட்லீ, ஊர் வாயை அடைக்க முடியாது. ஊர் ஆயிரம் பேசும். ஊர் வாயில் விழுந்ததை நம்பி நாம் வாழ்ந்துட்டு போவது முட்டாள் தனம் என நினைக்கிறேன். யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள். நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருங்கள். நடுவில் சின்ன சின்ன தடைகள் வரத்தான் செய்யும். ஜென்ஸி தலைமுறையினரான நாம் தான் அடுத்து வரப்போகிறோம். சமூக வலைத்தளங்களில் இவரு அவரை சொல்கிறார், அவர் இவரை சொல்கிறார் என கூற வேண்டாம். சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக சொல்லி விட்டு போகலாம்.
அரசியலில் அடுத்த தலைமுறையினர் வலுவாக இருப்பார்கள். அதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணன். நான் அரசியல்வாதியும் அல்ல, நான் அரசியல் பேசுவதும் இல்லை. என் முந்தைய தலைமுறையையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது 5 வயது குழந்தைகளும் சட்டசபை நேரலையை காலையில் இருந்து உட்கார்ந்து பார்க்கிறார்கள். வலுவான தலைமுறையினரை விஜய் அண்ணா உருவாக்கி உள்ளார். அதில் சந்தேகமே கிடையாது. அரசியல் எல்லாம் நல்லதல்ல, சரிவராது என்றெல்லாம் முன்பு சொல்வார்கள். ஆனால் அது மாறி உள்ளது. அரசியல் நமக்கானது. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம், எப்படி பார்க்கிறோம் என்பது நமது மூளையைப் பொறுத்தது என்றார்” என பேசியிருந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைவன், தலைமைப்பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அட்லீயின் இந்தப் பேச்சு அதனுடன் ஒப்பிடப்பட்டு வைரலாக பரவிவருகிறது.
இந்நிலையில் அட்லீயின் பேச்சுக்கு பதிலளித்திருக்கும் இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட், இந்த அரசியல் அடுத்த தலைமுறைக்கு ஆபத்தையே கொடுக்கும் என கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் போஸ் வெங்கட், “அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள் அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து தளபதி மு.க.ஸ்டாலினில் முடிந்ததாக கருதுகிறேன்.
இந்த தலைமுறை தவறான அரசியலை கற்றுக்கொள்கிறது.. இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகும்.. பிள்ளைகள் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காரல் மாக்ஸ். லெனின்,மாவோ.. என இவர்களை படித்து நல்ல புரட்சிகரமான கருத்துக்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
இயக்குனர் அட்லி சொல்லும் அரசியல் கற்றல் என்பது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தையே விளைவிக்கும்” என பதிவிட்டுள்ளார்.

