அருப்புக்கோட்டை | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து - இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
செய்தியாளர்: T.நவநீத கணேஷ்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் (23). காரியாபட்டியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வரும் இவர், இன்று காலை, புதிய இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்ய அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது ராகுல் ஒட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ராகுல் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பாளையம்பட்டியைச் சேர்ந்த நாகபாண்டி (45) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர் காவல் நிலைய போலீசார், இரண்டு உடலைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.