நாமக்கல் | இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த நபர் கைது – பின்னணி என்ன?
செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த (12-05-25) அன்று இரவு சுமார் 12 மணி அளவில் கோயில் அருகில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் இருவர் ஏர்கன் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது கோயில் வளாகத்தின் அருகே இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திய அந்த நபர், துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், பட்டணம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனது மகனை அப்பகுதியில் உள்ள தெரு நாய் ஒன்று கடிக்க வந்ததால் ஏர்கன் துப்பாக்கி மூலம் நாயை சுட முயன்றதாகவும், அப்போது அந்த நாய் தப்பியோடியதாகவும் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.