’ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு.. தற்கொலைக்கு பொறுப்பல்ல’ - உயர்நீதிமன்றத்தில் வாதம்!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வர்த்தக உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு..
அப்போது, ஆன்லைன் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த
வழக்கறிஞர், ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை அடிமைப்படுத்துவதாக கருத முடியாது. நீண்ட நேரம் சுய நினைவுடன் பயன்படுத்துவதாகவே கருத வேண்டும். 9 வகையான அறிவியல் காரணங்களுடன் ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் என விதியில் குறிப்பிட்டுள்ளது ஏற்புடையது அல்ல.
ஆன்லைன் விளையாட்டு திறமைக்கானது. திறமையாக விளையாடுபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பல விளையாட்டுகளில் நீண்ட நேரம் செலவிடும் நிலையில், திறமைக்கான ஆன்லைன் ரம்மி அடிமைப்படுத்தும் என்பதை ஏற்க முடியாது.
தற்கொலைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆன்லைன்
விளையாட்டில் பணம் இழந்ததற்காக மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசு தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தார்.