காங்கிரஸில் தொடரும் சர்ச்சை.. மேலூர் வேட்பாளருக்கு எதிர்ப்பு.. கண்டித்து போஸ்டர்!
தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ச்சியாக, 2-வது முறை ஆட்சியை அமைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வரும் திமுக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதில், தேசிய கட்சியான காங்கிரசுக்கு அதிகபட்சமாக 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. திமுகவுடனான கூட்டணி தொடர்வதிலும், தொகுதி எண்ணிக்கையிலும் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வழியாக உடன்பாட்டை எட்டி திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் பிரச்னை ஓய்ந்தபாடில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அந்தவகையில் தான், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதிலும் தொடர் சிக்கல் நீடித்து வந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு மொத்தமுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பில் இருந்து எம்.பி மாணிக்கம் தாகூர் விலகினார். தொடர்ந்து, அக்கட்சியின் மற்றொரு எம்.பி ஜோதிமணி, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை சமூக நீதிக்கு எதிரான ஒன்று என விமர்சித்திருந்தார். இவ்வாறு, காங்கிரஸ் கட்சியில் தொடர்ச்சியான முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
இந்த சூழலில், நேற்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் விடுபட்ட மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார். அதன்படி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விஸ்வநாதன் மேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அத்தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதில், அதில் கக்கன் பிறந்த பூமியில் காங்கிரஸ் கட்சி அழிக்கலாமா.. மேலூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வாய்ப்பை இழக்கலாமா.. மண்ணின் மைந்தர்களுக்கு இடமில்லையா.. மேலூர் சட்டமன்ற வெற்றி வாய்ப்புள்ள தொகுதி.. கண்ணெதிரில் வெற்றி பறிபோகிறதே.. உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பிரச்னைகள் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவருக்கு எதிராக அக்கட்சியைச் சார்ந்தவர்களே போஸ்டர் ஒட்டியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

