வில்லிவாக்கம், தி.நகர்.. விஜய் தேர்தல் பரப்புரை ரத்து! காரணம் என்ன?
தமிழ்நாடு அரசியல் பெரும்பாலும் திமுக, அதிமுக என இரு துருவ அரசியலாகவே இருந்த நிலையில், தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அரசியல் போக்கையே மாற்றியமைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தவெக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் நேரடியாக களம் காண்கிறார். இதற்கான வேட்புமனு தாக்கலையும் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர், கொளத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சூழலில் தான், இன்று தி.நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், வில்லிவாக்கம் மற்றும் தி.நகரில் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருந்தது.
மேலும், வில்லிவாக்கத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மற்றும் தி.நகரில் 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நேர கட்டுப்பாடுகள் காரணமாக இடமாற்றம் சாத்தியமில்லாத நிலையில் மாற்று நேர கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், பயண பாதை மற்றும் ஒலிபெருக்கி பயன்பாடு உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதால் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் 1 மணி நேரத்தில் வில்லிவாக்கத்தில் இருந்து தி.நகர் செல்ல முடியாது என்பதால் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

