தேர்தல் வந்தால், இந்தியை எதிர்ப்போம் என்பார்கள் – சீமான்
செய்தியாளர்: செ.சுபாஷ்
பழனி செல்வதற்காக, சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்....
அரசுப்பள்ளி தவிர தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுத்தர அனுமதி வழங்கியது யார்?
அண்ணாமலை சொல்லும்போது 53,000 அரசுப் பள்ளிக் கூடம் தவிர அனைத்திலும் இந்தி உள்ளது. தனியார் பள்ளிகளில் இந்தி உள்ளது என்றால் அதற்கு அனுமதி கொடுத்தது யார் என்று கேள்வி எழுகிறது. திமுக தேர்தல் வரும் போது இந்தியை எதிர்க்கிறோம் என சொல்வது, தமிழ் மீது பற்று உள்ளது போல் காட்டிக் கொள்வதற்காக தான்.
புதிதாக ஒரு மொழியை எதற்காக கற்றுக் கொள்ள வேண்டும்:
இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. இந்த நாட்டில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அதிகார மொழியாக இருந்திருக்க வேண்டும்.. அது இல்லாமல் இந்தி தான் இந்தியாவின் மொழி என்றால் எம்மொழி என்ன ஆச்சு. மும்மொழியில் எம்மொழி எங்கு இருக்கிறது.. தமிழ் படிப்பதற்கே வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருக்கும் போது புதிதாக ஒரு மொழியை எதற்காக கற்றுக் கொள்ள வேண்டும்.. இந்த கேள்வி அனைத்து மாநில மொழி பேசுபவர்களுக்கும் வரும்.. அதனால் எல்லா மொழியையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.
காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்...
எங்கள் கட்சிக்குள் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியேறுவதற்கு முழு சுதந்திரம் உள்ளது. தங்கச்சி காளியம்மாள் முதலில் சமூக செயல்பாட்டாளராக தான் இருந்தார்.. அவர்களை அழைத்துக் கொண்டு வந்தது நான் தான். பருவக் காலங்களில் இலையுதிர் காலம் என்று இருக்கும். அதுபோல எங்க கட்சிக்கு களையுதிர் காலம். வருவார்கள் போவார்கள். தங்கச்சிக்கு முழு சுதந்திரம் உள்ளது. இங்கே இருப்பதா வேற எந்த கட்சியில் போய் சேர்வதா என முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.
ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டின் இறையாண்மை ஒற்றுமையைக் கூறு போடுகிறீர்கள் என குற்றம் சாட்டுகிறேன். விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி அவர்களது கருத்தை தெரிவித்துள்ளார.; விசாரணையில் அது குறித்து முழுமையாக தெரியவரும். முதல்வர் வரி செலுத்துவதை நிறுத்தி விடுவோம். ஒரு நொடியில் என கூறியதற்கு அது எந்த நொடி என மீண்டும் சீமான் கேள்வி எழுப்பினார்..