CN Annadurai
CN AnnaduraiPT

“அந்த அச்சம் இருக்கும்வரை..” - தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணி பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்!

''வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்த வேண்டாம். காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்" என்றார் அண்ணா.

1967-ம் ஆண்டு அண்ணா உருவாக்கிய திமுக இன்றும் ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் திமுகவில் அண்ணா ஏற்படுத்திய கட்டமைப்பு. கிராமங்களில் இருப்பவர்களைக் கூட நேரடி அரசியலிலும் அது குறித்த விவாதங்களிலும் ஈடுபட வைத்தவர் அண்ணா. அதன் பின் வந்த கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்றோர் கட்சியின் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றாலும் அடித்தளம் அமைத்தது அண்ணா.

யார் அண்ணா!?

தலை சீவ மாட்டார், கண்ணாடி பார்க்க மாட்டார், மோதிரமோ கைக்கடிகாரமோ அணியும் பழக்கமில்லை ஆனால் அவர் பேசுகிறார் என்றால் அந்த 10 நிமிடங்களுக்காக நாள் முழுக்க மக்கள் காத்திருப்பார்கள். திமுகவினர் ஒரு நாளில் 5 கூட்டங்களுக்கு திட்டமிடுகிறார்கள் என்றால் வழி எங்கும் திரண்டிருக்கும் மக்கள் தங்கள் ஊர்களில் அண்ணா ஓரிரு வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று காத்திருப்பார்கள். அப்படி இப்படியாக ஒரு நாளில் 25 கூட்டங்களுக்கும் அதிகமாக நடந்திருக்கும்.

வார்த்தைகளில் வித்தை காட்டும் அவர் எதிரணியையும் மெய்சிலிர்க்கச் செய்வார். இன்னும் எத்தனை எத்தனையோ செயல்களால் மக்கள் மனதை வென்றவர்.. அவர் தான் மக்களால் அன்பொழுக அண்ணா என்றழைக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை.

பதின்ம வயதுகளில் இருந்தே பொது மேடைகளில் பேசி வளர்ந்தவர் தான் என்றாலும் தனது வார்த்தைகளால் எதிரணியை மடக்கத் தெரிந்தவர் அண்ணா. 'எதிர்க்கட்சி சரியில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி சொல்வதைப் பார்த்தால், விரைவில் நீங்களே அந்தக் குறையை போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன்... ' நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார், அண்ணா.

குடும்ப, கல்வி பின்னணி!

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாதுரை. தந்தை பெயர் நடராசன். தாயின் பெயர் பங்காரு அம்மாள். எளிய குடும்பம், பச்சையப்பன் பள்ளியில் ஆரம்ப கல்வி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட், அடுத்தது பி.ஏ. ஆனர்ஸ். கல்லூரிக் காலத்திலேயே புத்தகங்களில் வாழ்ந்தவர் அண்ணா.

1934 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடிக்கிறார். படிக்கும் காலத்திலேயே மாணவர் சங்கச் செயலாளர், ஆங்கில மாணவர் கழக செயலாளர், பொருளாதாரக் கழகச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இதனால் மாணவர்கள் மத்தியில் அண்ணாவிற்கு செல்வாக்கு அதிகரித்தது.

அரசியல், பொருளாதாரத் துறைகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற அண்ணா, வரலாற்றிலும், இலக்கியத்திலும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். அறிஞர் அண்ணா, தமிழில் அடுக்குமொழி சொல்லாடலில் ஒப்பில்லாதவர். தமிழில் அடுக்குமொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் அதேபோன்று பேச முடியுமா? என ஒருமுறை அண்ணாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு, 'ஏன் முடியாது, எப்படிப்பட்ட சொற்றொடர் வேண்டும்?' எனக் கேட்டுள்ளார்.

Because என்ற சொல் தொடர்ந்து மூன்று முறை வரும்படி ஒரு சொற்றொடர் சொல்ல முடியுமா? எனக் கேட்டுள்ளார்கள். அதற்கு சற்றும் யோசிக்காமல், "No sentence ends with because, because, because is a conjunction" என பேரறிஞர் அண்ணா பதில் கூறி அதிர்ந்து போயினர் கேள்வியை எழுப்பியவர்கள். அவர்தான் பேரறிஞர் அண்ணா, தென்னாட்டின் பெர்னாட்ஷா.

CN Annadurai
“மற்ற அரசியல் கட்சி தலைவர்களை விட அதிகமாக உழைத்தவன்; நான் செய்த சேவைகளும், சாதனைகளும்..”-சரத்குமார்!

திருப்பு முனையான சந்திப்பு!

அண்ணாவிற்கு திருப்புமுனை ஏற்படுத்திய ஆண்டு 1934. பி.ஏ. ஆனர்ஸ் தேர்வு எழுதியிருந்த அவர் இடைப்பட்ட காலத்தில் பெரியாரைச் சந்திக்கிறார். திருப்பூரில் நடந்த ஒரு வாலிபர் மாநாட்டில் நிகழ்ந்தது அந்த சந்திப்பு. இது குறித்து அவரே கூறியிருக்கிறார். “பெரியார் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய் என கேட்டார். படிக்கிறேன், பரிட்சை எழுதியிருக்கிறேன் என்றேன். உத்தியோகம் பார்க்கப்போகிறாயா என்றார். இல்லை, உத்தியோகம் பார்க்க விருப்பம் இல்லை, பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம் என பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனக்கு தலைவரானார். நான் அவருக்கு சுவீகாரப் புத்திரனாக ஆகிவிட்டேன்” அவ்வளவு தான்., முடிந்தது கதை.

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்..” - அண்ணாவின் அரசியல் நாகரீகம்!

1967-ம் ஆண்டு அது. தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த சமயம். காங்கிரஸ் தொண்டர்களிடம் சோர்வும், திமுகவினரிடம் உற்சாகமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. காமராஜர் தோற்றுவிட்டார். காமராஜரின் தோல்வியை காங்கிரஸாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1949-ம் ஆண்டு ஆரம்பித்த திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. அண்ணா முதல்வராகப்போகிறார். ஆனால் அண்ணா கலக்கத்துடனே இருந்தார். ''வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்த வேண்டாம். காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்" என்றார் அண்ணா. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என மனமுவந்து கூறிய நாகரிக அரசியலின் ஆணிவேரான அதே அண்ணாதான்!

CN Annadurai
“வாழ்த்துகள்., மக்கள் பணி சிறக்கட்டும்”- விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குறித்து உதயநிதி

அண்ணாவின் தமிழ்ப்பணி - மிகப்பெரிய கலை, இலக்கிய ஆளுமை!

அண்ணாவின் தமிழ்ப்பணி அளவிடற்கு அரியது. அண்ணா சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனங்களைத் தீட்டியவர். அவருடைய 'ஓரிரவு', 'வேலைக்காரி', 'நீதிதேவன் மயக்கம்', 'சந்திரமோகன்', 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' ஆகிய நாடகங்கள் திரைவடிவம் பெற்றன.

இதழ்களைத் தவிர அவரது தலைசிறந்த பேச்சுக்களும் நூல்வடிவம் பெற்றன. 'ஏ தாழ்ந்த தமிழகமே',, 'நாடும் ஏடும்', 'தீ பரவட்டும்' முதலியன இவ்வாறு வந்தவை. நூல்களாக வெளிவந்தவை 'கம்பரசம்', 'ரோமாபுரி ராணிகள்' முதலியன.

மேடைப் பேச்சு, இதழ்களில் கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் தனியாக வெளிவந்த நூல்கள் எல்லாவற்றிலும் அவர் தமது தனித்தன்மையைப் பதித்தார். இதை அப்படியே பின்பற்ற முயன்று வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. சமூகநலன், சமுதாய முன்னேற்றம், தமிழ் உணர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகியவை அவரது எழுத்துகளில் அடிநாதமாக விளங்கின.

“அந்த அச்சம் இருக்கும்வரை...” - அண்ணாவின் அனல் பேச்சு!

திமுக ஆட்சி முதன்முதலாக பதவியேற்று ஓராண்டை அண்ணாத்துரை ஆற்றிய உரை ஒன்று இன்றளவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. “சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம், தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர், இருமொழிக் கொள்கை (தமிழ், ஆங்கிலம்) ஆகிய முப்பெரும் சாதனைகளை இந்த ஓராண்டிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, என்னுடைய ஆட்சி செய்திருக்கிறது.

இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று இப்பொழுது துடிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். சரி, நீங்கள் எங்களைப் பதவியைவிட்டு விலக்கலாம்; அது முடியுமா? என்று நான் சவால் விட மாட்டேன்; முடியும். ஆனால், எங்களை நீக்கிவிட்டு நீங்கள் வந்து உட்கார்ந்தால், இதையெல்லாம் நாம் இல்லாதபோது, அவர்கள் அல்லவா செய்துவிட்டார்கள். ஆகவே, அதையெல்லாம் மாற்றலாம் என்று நினைத்தால், அடுத்த நிமிடம் மாற்றினால் என்னாகும் நம்முடைய நிலை, நாட்டினுடைய நிலை எப்படிப்பட்ட எதிர்ப்பு கிளம்பும் என்று நினைக்கும்பொழுது, ஒரு அச்சம் உங்களை உலுக்கும் - அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாத்துரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்'' என்று அண்ணா ஆற்றிய உரைதான் அது!

CN Annadurai
"அரசியலுக்கு வருவதற்கான எல்லா உரிமையும் அவருக்கு உண்டு"-விஜய் அரசியல் வருகை குறித்து கனிமொழி எம்.பி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com