“10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி” - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்
பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியிருந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிச்சுமையை நாங்கள்தான் சரிசெய்து வருகிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. நிதிமேலாண்மையில் நுட்பமாக செயல்படுகிறோம். பாஜக ஆளும் மாநிலங்கள், அவர்களது கூட்டணி ஆளும் மாநிலங்கள் சமீபத்திய வரிப்பகிர்வில் மொத்த நிதியில் 40% நிதியை அவர்கள் மட்டுமே வாங்கியுள்ளார்கள். தென் மாநிலங்களுக்கு 15% நிதிதான் கிடைத்துள்ளது. தென்மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உத்தரபிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடக் குறைவு. இம்மாதிரியான சூழலில்தான் பல்வேறு நலத்திட்டங்களையும் நாம் செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “செலக்டிவ் அம்னீசியா என்றொரு நோய் இருக்கிறது. இது தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களுக்கும் வந்துவிட்டதோ என்று பயமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளோம் என்று 36 பக்க வெள்ளை அறிக்கையை பாராளுமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்துள்ளோம். 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளோம். சென்னை மெட்ரோவிற்கு ரூ. 43 ஆயிரம் கோடி வாங்கிக்கொடுத்துள்ளோம்.
மாநில அரசு திட்டமாக அறிவித்தபின் மத்திய அரசு பணமே கொடுக்கக்கூடாது. ஆனால், இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களது அரசியலுக்காக மக்கள் எதற்காக பாதிக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதி 43 ஆயிரம் கோடி ரூபாயை சென்னை மெட்ரோவிற்காக வாங்கிக்கொடுத்துள்ளோம்.
பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் வர இருக்கிறது. அதிலும் தமிழகத்திற்கு பெரிய அளவில் நிதிகள், திட்டங்கள் வரும். அதனால் வேண்டுமென்றே இவர்களது ஆட்சியின் லட்சணத்தை மறைப்பதற்காக தினமும் மத்திய அரசின் மீது குறை சொல்லுவதை மட்டுமே முழு நேர வேலையாக திமுக அரசு வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.