“தமிழகத்தில் முதன்முறையாக மும்முனைப்போட்டி” - அண்ணாமலை பேச்சு! திமுக : அதிமுக : பாஜக?

தமிழ்நாட்டில் முதன்முறையாக மும்முனைப் போட்டி இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலைpt web

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. முந்தைய தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக, தற்போது அதிலிருந்து விலகியுள்ளது.

தமிழகத்தில் இனி அதிமுக தனித்துதான் தேர்தலைச் சந்திக்கும் எனவும் பாஜகவுடனான கூட்டணி கிடையாது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார். ஆனால், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகள் பலவும், அதிமுக பாஜக உடனான ரகசிய கூட்டணியில் இருப்பதாகவும், தேர்தலுக்கு பின் இரு கட்சிகளும் சேர்ந்துவிடும் என்றும் விமர்சித்து வந்தன.

பாஜக தலைவர்கள் அதிமுகவை விமர்சனம் செய்யாததும், அண்மையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவும், கூட்டணிக் கட்சிகளுக்கான கதவை பாஜக திறந்தே வைத்திருக்கிறது என்று கூறியதும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த பேச்சினை மீண்டும் எழுப்பியது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி இதை மீண்டும் மீண்டும் மறுத்து வலியுறுத்தி வந்தார். நேற்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “இன்னும் பாஜகவுடன் மறைமுக உறவை வைத்துக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டுள்ளார்கள். இதை நானும் பலமுறை சொல்லிவிட்டேன், முன்னணித் தலைவர்களும் தெளிவுபடுத்திவிட்டார்கள். இறுதியாக சொல்கிறோம், உறுதியாக சொல்கிறோம் அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக ஒரு பெரிய மும்முனைப் போட்டி நிலவி வருவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பிப்ரவரி முதல் வாரத்தில் பாஜக எந்த இடத்தில் இருக்க வேண்டும் என பாடுபட்டுக் கொண்டிருந்தோமோ சரியாக அந்த இடத்தில் உள்ளோம். வாக்கு சதவிகிதம் முக்கியம். மூன்று முதல் நான்குமுனை போட்டிகளில் யாராலும் தொகுதியை கைப்பற்றுவது பற்றி யூகிக்க முடியாது.

தமிழகம் முதன்முறையாக மும்முனைப் போட்டியை சந்தித்து வருகிறது. கருத்துக்கணிப்புகள் கூட மும்முனைப் போட்டியாகத்தான் எடுக்கிறார்கள். இருமுனைப் போட்டியாக எடுப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com