”அவர்தான் பாஜகவ வரச்சொன்னார்.. இப்போ இல்லங்கிறார்” - ராமதாஸ் மீது கேள்விகளை அடுக்கிய அன்புமணி!
பாஜக மீது எனக்கென்ன தனிபாசம் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை சோழிங்கநல்லூரில் அக்கட்சியின் சமூக ஊடக பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சமூக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாமக - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி அமைந்தது தொடர்பாகதான் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ் அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணிக்கு வேண்டாம் என சொல்லப் போகிறேன். என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் 2024ல் கூட்டணி பேசினேன்... சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது அவர் எதற்காக வந்தார் என நான் டாக்டர் ராமதாஸிடம் கேட்டேன். அதற்கு அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்து சென்றார் என என்னிடம் கூறினார். அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அப்போதே என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறேன்.
ராமதாஸ், சரி என்று சொல்லியதால்தான் பாஜகவினர் தைலாபுரம் வீட்டிற்கு வந்தனர் அதன்பிறகுதான் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. தற்போது இல்லை என டாக்டர் ராமதாஸ் மறுக்கிறார்.. அவர் வயது முததிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல மாறிவிட்டார் அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்...
திமுகதான் பாமகவிற்கு எதிரி - திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். விசிகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் மீது விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு. வன்னி அரசுவும், ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. என்றைக்காவது ஒருநாள் திருமாவளவன் நிறுவனர் ராமதாஸ் அவர்களை புகழ்ந்து பேசி உள்ளாரா ? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு தற்போதைய திடீர் பாசம் ஏன் ஏற்பட்டது. திடீரென நிறுவனர் ராமதாஸ் அவர்களை சென்று சந்திப்பது ஏன்? இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி. இது குறித்து எல்லாம் யோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.