”இது நடந்தால் 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி உறுதி..” - இந்திய அணியை எச்சரித்த ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து அணி 1-0 என தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்திய வீரர்கள் 5 சதங்கள் அடித்தபோதும் ஏற்பட்ட தோல்வி பல்வேறு விமர்சனங்களை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே பும்ரா நீண்ட ஓவர்கள் வீசியது, அவருடைய உடலுக்கு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தியது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் பும்ரா இல்லையென்றால் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெறும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
பும்ரா இல்லையென்றால் தோல்வி உறுதி..
முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றிருந்தாலும் இந்தியா 2வது போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த சூழலில் இந்தியா 2வது டெஸ்ட் போட்டியில் வெல்லவேண்டுமென்றால் பும்ரா அணியில் இருக்க வேண்டியது அவசியம் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ”பும்ராவிற்கு ஓய்வு வழங்குவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. பும்ரா அணியில் இல்லாவிட்டால் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் தோற்பது உறுதியாகிவிடும்” என்று பேசியுள்ளார்.