கரூர் பரப்புரை| அனுமதி கிடைக்காத நிலை.. விஜய்க்காக விட்டுக்கொடுத்த அன்புமணி? என்ன நடந்தது?
பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ”உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற முழக்கத்துடன் ஜுலை மாதம் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல, தவெக தலைவர் விஜயும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் சனிக்கிழமைகள் தோறும் தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தான், செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அனுமதி கேட்டிருந்தார். இதையடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடை பயணம் மேற்கொள்வதற்கு காவல்துறையும் அந்த தேதியில் அனுமதி கொடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம் கரூர் மாவட்டத்தில் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அதே தேதியில் அன்புமணி ராமதாஸ் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார் என காவல்துறை சார்பில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக் பாமகவிற்கு அனுமதி கொடுத்ததால் விஜயின் சுற்றுப்பயணத்திற்கு கரூரில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் தான் அன்புமணி ராமதாஸின் பயண திட்டத்தில் மாற்றம் செய்து 27-ஆம் தேதி சனிக்கிழமை திண்டுக்கல் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வார் எனவும், 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கரூரில் நடைபயணம் மேற்கொள்வார் எனவும் பாமக தரப்பில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அன்புமணி ராமதாஸின் திடீர் பயணத் திட்டத்திற்கு காரணம், தமிழக வெற்றிக் கழகத்தினர் பாமக தலைமையிடம் பேசியதாகவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் நடைபயணமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் சுற்றுப்பயணமும் ஒரே நேரத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில் இரண்டு கட்சிகளின் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது..