”வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும்..” - அன்புமணி ராமதாஸ்
மேற்காசியப் போர், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பன்னாட்டு சந்தை விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி, வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 868.50 ரூபாயிலிருந்து 957.50 ரூபாயாக 3 மாதங்களில் 89 ரூபாய் உயர்ந்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இந்த சுமையை அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தாங்கி, விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையே போரால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலைகளை உயர்த்தி வருகின்றன.
இந்தியச் சமையலறைகளில் நேரடியான பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில், தொடக்கத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு 928 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டுவந்தது. இதற்கிடையே வணிக சிலிண்டர் விலைகள் 81% உயர்த்தப்பட்ட நிலையில், உணவகங்களில் உணவுபொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தசூழலில் வீட்டு உபயோக சிலிண்டர் விலைகளும் உயரும் அபாயம் இருந்த நிலையில், இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக திரும்ப பெறவேண்டும்..
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அன்புமணி ராமதாஸ், “சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு: மக்களால் தாங்க முடியாத விலை உயர்வை அரசு உடனடியாக திருமப் பெற வேண்டும்!
வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.29 உயர்த்தியுள்ளன. இதனால் சென்னையில் இதுவரை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு பயன்பாடுக்கான எரிவாயு உருளையின் விலை ரூ.957.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களின் அன்றாடத் தேவையான சமையல் எரிவாயு உருளை விலை அண்மைக்காலத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிக்கும்.
கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. இப்போது மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 868.50 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை 3 மாதங்களில் ரூ.89 உயர்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் மக்களின் வருவாய் ஒரு விழுக்காடு கூட உயராத நிலையில் எரிவாயு விலை 10.25% உயர்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சமையல் எரிவாயு விலை உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களையும், நியாயங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. மேற்காசியப் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலையும் உயர்ந்திருப்பது தான் இதற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விலை உயர்விலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களும், அரசும் இன்னும் சில மாதங்களுக்கு தாங்கிக் கொள்ள வேண்டும்; மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

