நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவரை வீடு புகுந்து உடன் படிக்கும் பள்ளி மாணவர்களே தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்ட அண்ணனை காப்பாற்றச் சென்ற தங்கைக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் அவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அச்சம்பவம் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, “இந்தாண்டு வைக்கம் போராட்டம் நூறு ஆண்டுகளைக் கடந்த ஆண்டு. இந்தாண்டில் முதலமைச்சர், வைக்கம் போராட்டம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், பேச்சுப்போட்டு கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டும், தந்தை பெரியார் எதற்கெல்லாம் குரல் கொடுத்தார் என்பதை எடுத்துரைக்க வேண்டும் என்று என்னுடைய துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் இன்று உங்களிடம் வைக்கின்ற ஒரு வேண்டுகோள், மிகப்பெரிய ஆளுமைகள் நமக்கு அதிகமான புத்திமதிகளை சொல்லியுள்ளார்கள். மனித நேயம் என்றால் என்ன என்பதன் அடிப்படை விஷயங்களை பல்வேறு வழிகளின் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அதெல்லாம் புத்திக்கு ஏறாமல் இருந்த மனித இனத்திற்கு கொரோனா எனும் நோய் நம்மை தாக்கும் போது தான் தெரிந்தது.
அதையெல்லாம் கடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் பள்ளிக்கல்வித்துறையில் முதலமைச்சர் கொண்டு வரும் திட்டங்கள் மூலம் பெருமையை தேடித் தந்து கொண்டிருக்கும் போது இரு தினங்கள் முன் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதன் விவரங்களை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.
மாணவர்களுக்கு நான் வைக்குக் வேண்டுகோள் ஒன்று தான். பள்ளிக்கூடத்திற்கு நீங்கள் செல்லும் போது உங்களது புத்தியை கூர்மைப்படுத்த வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம். உங்களை கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என ஆசைப்படவில்லை. ஒரு சில சம்பவங்கள் எங்களை மிகவும் பாதிக்கிறது.
மாணவர்களை அறிவு சார்ந்து கொண்டு வரவேண்டும் என நாங்கள் ஆசைப்படும் போது, உங்களுக்குள் வேற்றுமை உணர்வை விதைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டும் என நினைக்கும் அரசாங்கம் இந்த அரசாங்கம். தவறு செய்தவர்கள் மேல் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட மாணவரையும் அவரது தங்கையையும் பாதுகாப்பான முறையில் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பேன். பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக எனது கடமை. மாணவர்கள் தங்களது நட்பு வட்டங்களைத் தாண்டி அனைவரையும் நண்பர்களாக அண்ணன்களாக தங்கைகளாக பாருங்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற வார்த்தை மிக வலிமையானது. மாற்றத்தை உருவாக்க வேண்டிய வயது பள்ளி மாணவர்களாகிய நம்மிடம் தான் உள்ளது” என்றார்.