tvk vijay
tvk vijay PT

ஓராண்டை நிறைவு செய்த தவெக | கட்சி - மாநாடு - கள அரசியல்.. என்ன செய்தார் விஜய்? - ஒரு பருந்து பார்வை

தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு செய்துள்ளது.
Published on

தமிழக அரசியல் களத்தில் புது வரவாக குதித்து இன்றோடு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இந்த ஓராண்டில், அவரது அரசியல் செயல்பாடுகள் என்ன? இதுவரை எந்தெந்த பிரச்னைகளுக்கெல்லாம் குரல் கொடுத்தார்.. என்பதை, ‘என்ன செய்தார் விஜய்’ என்று இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் to அரசியல் கட்சி தலைவர்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மிளிரும் விஜய், சம்பளத்திலும் சரி.. படத்தின் பிசினஸிலும் சரி நம்பர் ஒன் நாயகனாக மிளிர்ந்து வருகிறார். இந்த நிலையில்தான், தனது நீண்டகால அரசியல் வேட்கையின் அடுத்த கட்டமாக, கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி சரியாக மதியம் 1 மணியளவில் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்குவதாக 3 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார் விஜய்.

தவெக
தவெக

ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் என்று மாநிலத்தில் ஆளும் திமுகவையும், பிளவு வாத அரசியல் கலாச்சாரம் என்று மத்தியில் ஆளும் பாஜகவையும் ஒரே நேரத்தில் விமர்சித்த விஜய், எண்ணித் துணிக கருமம் என்ற வல்லுவனின் வாக்குப்படி, அனைத்திற்கும் தயாராகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்தார். குறிப்பாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் என்றும் அறிக்கையில் கூறி முடித்திருந்தார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

அதன்படி, ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும், தன்னை சுற்றி இருக்கும் பிசினஸை விட்டு விலகி, முழு நேர அரசியலில் களமிறங்குகிறேன் என்ற அவரது அறிவிப்பு, திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக, புதிதாக கட்சி துவங்குபவர்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் அனைத்தையும் அறிவித்து  கட்சி தொடங்குவார்கள். ஆனால், விஜய்யின் அறிவிப்பு வித்தியாசமாக இருந்தது.

முதலமைச்சருக்கு வாழ்த்து to மாணவர்களுக்கு கல்வி விருது..

கட்சி துவங்கியபிறகு, அரசியல் தலைவர்கள் பலருக்கும் வாழ்த்து தெரிவித்த விஜய், முதன்முறையாக வாழ்த்து சொன்னது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத்தான். ஆம், மார்ச் ஒன்றாம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் விஜய். பிற்காலத்தில் அரசியல் எதிரியாக அவர் அறிவித்ததே திமுகவைத்தான். இப்படியாக, முதல்வருக்கு வாழ்த்து கூறியது கவனம் ஈர்த்தது.

தொடர்ந்து, பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து கூறியவர், புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார். மார்ச் 7ம் தேதி கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் நியமன அறிக்கை வெளியானது. அடுத்ததாக, மார்ச் 8ல் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை துவங்கி, அதில் தானே முதல் உறுப்பினராக இணைந்து, கட்சியின் கொள்கை பிடித்திருந்தால் சேர்ந்து உடன் பயணிக்குமாறு வீடியோ வெளியிட்டார். இப்படியாக, தவெகவில் இணைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டிவிட்டதாகவும் கட்சி தரப்பில் கூறியுள்ளனர்.

கல்வி விருது விழா
த.வெ.க. தலைவர் விஜய்புதிய தலைமுறை

அடுத்தடுத்ததாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு கண்டனங்களை தெரிவித்தவர், முதல்முறையாக கண்டித்தது CAA சட்ட அறிவிப்பைத்தான். சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார் விஜய்.

 தொடர்ந்து, தொகுதிவாரியாக பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை அழைத்து, அவர்களுக்கு கல்வி விருது கொடுத்தார். கடந்த ஆண்டு மட்டுமல்ல. அதற்கு முந்தைய ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கி கவனம் ஈர்த்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி உயிரைவிட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்.

கட்சி கொடி to 26 தீர்மானங்கள்.. 

இதையடுத்து, ஆகஸ்ட் 22ம் தேதி சிவப்பு, மஞ்சள் நிறத்தில், இரு போர் யானைகள் பிளிர, நடுவில் வாகைப்பூ இடம்பெற தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்து ஏற்றிவைத்து, கொடி பாடலையும் வெளியிட்டார் விஜய். இதற்கு பிறகு நடந்த சம்பவம், அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆம், அம்பேத்கர் பிறந்தநாளுக்கு அறிக்கை வெளியிட்டவர், பெரியார் பிறந்தநாளுக்கு, பெரியார் திடலுக்கே சென்று நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சத்தமே இல்லாமல் அவர் செய்த அந்த சம்பவம், பெரியாரிஸ்டுகள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்KIRANSA

இதையடுத்து, முதல் மாநாடாக கொள்கை விளக்க மாநாட்டை நடத்த திட்டமிட்டு, விக்கிரவாண்டியில் ஏற்பாடுகள் நடந்தன. பலகட்ட நிபந்தனை, கெடுபிடிகளுக்குப் பிறகு அக்டோபர் 27ம் தேதி முதல் மாநில மாநாட்டை நடத்திய விஜய், சுமார் 45 நிமிடங்களுக்கு தனது கன்னிப்பேச்சிலேயே கர்ஜித்தார். பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் கைகாட்டியவர், தன்னோடு கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அணுகுண்டையும் கொளுத்திப்போட்டார். அது அடுத்த சில நாட்களுக்கு கொழுந்துவிட்டு எறிந்ததில், திமுக கூட்டணியில் சிறு அதிர்வும் ஏற்பட்டது. இப்படியாக நடைபெற்ற மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றிருந்தனர். 800 மீட்டர் தொலைவுக்கு மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக், ஆவேச பேச்சால் அடுத்த ஒரு மாதத்திற்கு அரசியல் பேச்சுகளும், பேட்டிகளும் அவரைப்பற்றியே அமைந்தது. எனினும், மாநாட்டிற்கு வரும்போது விபத்தில் உயிரிழந்த தொண்டர்களுக்கு மாநாட்டு மேடையிலேயே இரங்கல் தெரிவிக்கவில்லையே என்ற விமர்சனம் எழுந்தபோது, செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்களை நிறைவேற்றியபோது, அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்KIRANSA

அந்த மாநாட்டிலேயே, பெரியார், காமராசர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரை, தங்களது கொள்கைத் தலைவர்களாகவும் அறிவித்தார். தொடர்ந்து, முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாளில், பனையூர் அலுவலகத்தில் வைத்து  முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தமிழ்நாடு நாளில் வாழ்த்து கூறியதோடு, தீபாவளிக்கும் வாழ்த்து கூறினார்.

அம்பேத்கர் புத்தக வெளியீடும்.. திருமாவளவன் குறித்த பேச்சும்!

தொடர்ந்து, ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, மழைக்காலத்தில் ஆளும் திமுகவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார் விஜய். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அம்பேத்கரின் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என்றும் அறிக்கை வெளியிட்டார். இருப்பினும், பெரியார் குறித்த சீமானின் சர்ச்சைப் பேச்சிற்கு அவர் மௌனம் காத்து வருவது விமர்சனத்தை பெற்றுள்ளது.

அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்விகடன்

முன்னதாகவே, சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று, அந்த புத்தகத்தை வெளியிட்டும் உரையாற்றினார். அதில், திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்தபோது, திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று நினைத்து அதை அவர் தவிர்த்தார். இந்த நிலையில்தான், தனது உரையில் மணிப்பூர் கொடூரத்தை குறிப்பிட்டு மத்திய அரசையும், வேங்கைவயல் சம்பவத்தை குறிப்பிட்டு மாநில அரசையும் தாக்கிப் பேசினார். அம்பேத்கர் இருந்திருந்தால் அவர் வெட்கி தலைகுணிந்திருப்பார் என்றவர், கூட்டணி கணக்கை மட்டுமே நம்பி, 200 வெல்வோம் என்ற திமுகவின் கணக்கை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்றும் பேசினார்.

அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் விஜய்
அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் விஜய்புதிய தலைமுறை

உரையின் முடிவில், திருமாவளவன் வராததில் திமுக கூட்டணி அழுத்தம் இருக்கும் என்று தன்னால் புரிந்துகொள்ள முடிந்தாலும், திருமாவின் மனது இந்த மேடையில்தான் இருக்கும் என்றும் சிக்ஸர் அடித்தார். இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலுக்கு வாழ்த்து கூறியவர், எம்ஜிஆர் பிறந்தநாளில், ”கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்.. இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இப்போது மட்டுமல்ல, மாநாட்டு மேடையிலுமே தன் மீதான விமர்சனத்திற்கு எம்ஜிஆர், எண்டிஆர் ஐ மேற்கோள்காட்டி பதிலடி கொடுத்திருந்தார்.

வெளியில் வரவில்லை என்ற சர்ச்சை to புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு..

கட்சி துவங்கியதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட அதிமுகவை விமர்சிக்காத விஜய், தேவைப்படும் இடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆருக்கு புகழ் வணக்கம் செய்துள்ளார். தனது கடைசி படத்திற்கு ஜனநாயகன் என்று பெயர் வைத்து, எம்ஜிஆர் பாணியிலேயே ‘நான் ஆணையிட்டால்’ என்று சாட்டையை சுழற்றும் போஸ்டரும் வெளியாகியது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt web

இவை அத்தனையும் தாண்டி, கட்சி துவங்கி இதுவரை களத்திற்கு வரவே இல்லையே என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில்தான், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் போராட்டக்குழுவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். காவல்துறையின் பல்வேறு கெடுபிடிகளுக்கு இடையே, மண்டபத்தில் சந்திக்க அனுமதிகொடுக்கப்பட்டது. அப்போது, பிரசார வாகணத்தில் வந்த விஜய், மக்கள் மத்தியில் 10 நிமிடங்களுக்கு உரையாற்றினார். தனது கள அரசியல் ஏகனாபுரம் விவசாயிகளிடம் இருந்து துவங்குவதாக கூறியவர், இங்கு விமான நிலையம் அமையக்கூடாது. அதற்கான போராட்டத்தில்  எப்போதும் உங்களுடன் நிற்பேன் என்று பரந்தூர் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார். அப்போதும் திமுக மீதான விமர்சன நெடி அதிகமாக இருந்தது.

ஆதவ் அர்ஜுனா, விஜய்
ஆதவ் அர்ஜுனா, விஜய்pt web

இந்த நிலையில்தான், மாவட்டச் செயலாளர்களை நேர்காணல் நடத்தி பல கட்டங்களாக அறிவித்து வருபவர், ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரை கட்சியில் இணைத்து அவர்களுக்கு பொறுப்பு கொடுத்துள்ளார். கொள்கைப் பரப்புச் செயலாளர், பொருளாளர் என  மாநில அளவில் 19 பேரை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். அரசியல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜுன் கட்சிக்குள் வரும்போது, விஜய்யின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் முரண்பாடு ஏற்படும் என்ற கருத்து எழுந்தது. இந்த நிலையில்தான், தன்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது வியூகங்களைப் பின்பற்றி ஆதவ் அர்ஜுனா செயல்படுவார் என்று அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் விஜய்.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்KIRANSA

இப்படியாக, விஜய்யின் இந்த ஒரு வருட அரசியல் பயணத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அலுவலகத்தில் வைத்து நிவாரணம் வழங்கியது, செய்தியாளர்களை சந்திக்காதது போன்றவை விமர்சனத்தை பெற்றுள்ளன. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து மற்ற தேர்தல்களை புறக்கணித்துள்ள விஜய், வரும் மார்ச் மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். 2026ல் அவர் வைத்துள்ள இலக்கை எட்டிப்பிடிப்பாரா என்ற கேள்விக்கு, இனி வரும் காலங்களில் அவரது செயல்பாடுகளே பதிலாக அமையும்.. தவெகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்...!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com