கரூர் | திமுக முப்பெரும் விழா.. ஏன் முக்கியமானதாகிறது? ஓர் வரலாற்றுப் பார்வை!
திமுகவினரைப் பொறுத்தளவில், முப்பெரும் விழா அவர்களுக்கு முக்கியமான ஒன்று. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், கரூரில் இன்று நடைபெறும் முப்பெரும் விழா, இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதுபற்றி நாம் பார்ப்போம்!
திராவிட இயக்கத்தினரின் விசேஷமான மாதம் செப்டம்பர்!
வரலாற்றில் ஒவ்வோர் இயக்கத்துக்கும் சில மாதங்கள் விசேஷமானதாக அமைவதுண்டு. திராவிட இயக்கத்தினரைப் பொறுத்த அளவில், அப்படியான ஒரு மாதம் என்றால், அது செப்டம்பர்தான். திராவிட இயக்கத்தினர் மிக முக்கியமான பல முடிவுகளை எடுத்த, முக்கியமான திட்டங்கள் அல்லது முழக்கங்களை வகுத்த, வரலாற்றில் சில முக்கியமான தொடக்கங்களை முன்னெடுத்த மாதம் என்பதோடு திராவிட இயக்கத்தின் இரு பெரும் தளகர்த்தர்களும் ஒரு பேரியக்கமும் தோன்றிய மாதமும் இது! இன்றைய திராவிட இயக்கத்தின் முதல் முக்கியமான சமூக, அரசியல் வெளிப்பாடு என்று எடுத்துக் கொண்டால், அது சென்னை திராவிடர் சங்கம் என்று பெயரிடப்பட்ட மெட்ராஸ் யுனைட்டட் லீக்தான்! 1912 அக்டோபரிலும் தொடர்ந்து நவம்பரிலும் அடுத்தடுத்த பெயர்களைச் சூடிக்கொண்ட இந்த இயக்கத்தின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது 1912 செப்டம்பரில்தான்!
இந்தியத் துணை கண்டத்தையே பிற்காலத்தில் சுழற்றி அடிப்பதாக மாறிய சமூக நீதி அரசியலுக்கு முன்மாதிரியாக “அரசுப் பணிகளில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்” எனும் வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான முன்னோடி அரசாணையை நீதிக் கட்சி பிறப்பித்தது, 1921, செப்டம்பரில்தான்! திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான செயல்பாடு, தமிழைக் காக்கும் பணியில் அது களம் இறங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம். பிரிட்டிஷ் இந்தியாவில், சென்னை மாகாணத்தில் இந்தி திணிப்பு நடவடிக்கையில் ராஜாஜி அரசு இறங்கியதைத் தொடர்ந்து, தந்தை பெரியாரும் முன்னின்று நடத்திய முக்கியமான கூட்டம், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் பங்கெடுத்த கூட்டம் சென்னையில் நடந்தது. மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியும் பெரியாரும் இணைந்து நின்று ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய இந்தக் கூட்டம் நடந்தது, 1938 செப்டம்பரில்தான்!
ஏன் முப்பெரும் விழா முக்கியமானதாகிறது?
திராவிட இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களான பெரியாரும், அண்ணாவும் பிறந்தது செப்டம்பரில்தான். பெரியாரிடமிருந்து முரண்பட்டு தி.க.விலிருந்து பிரிந்து வந்த அண்ணா, திமுகவைத் தொடங்கியதும் செப்டம்பரில்தான். 1879 செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாள்; 1909 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், 1949 செப்டம்பர் 17 திமுக பிறந்த நாள்… இந்த மூன்று நாட்களையும் கொண்டாடும் சாக்கில், திராவிட இயக்க வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கடத்தும் நோக்கில்தான் முப்பெரும் விழாவை 1974இல் அறிமுகப் படுத்தினார் திமுகவின் அரை நூற்றாண்டு தலைவரான கலைஞர் மு.கருணாநிதி.
திமுக வரலாற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கடத்தும் விதமாக தமிழகம் முழுக்க பேச்சு, கட்டுரைப் போட்டிகள்; ஊர்தோறும் பொதுக் கூட்டங்கள்; மாநில தலைமையின் சார்பில் ஒரு நகரத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம், இப்படி விரிவான ஏற்பாடுகளுடன் ஆரம்பித்தது திமுகவின் முப்பெரும் விழா மரபு. 1985 முதலாக கட்சிக்காகவும், கோட்பாட்டுக்காகவும் நெடுங்காலமாக உழைத்த முன்னோடிகளின் பணிகளை அங்கீகரித்து பெருமைப்படுத்தும் விதமாக முப்பெரும் விழாவில் விருதுகளும் அறிவிக்கப்படலாயின. சவால்களை எதிர்கொள்ளும் காலகட்டங்களில் எல்லாம் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ளவும், மேலும் துடிப்போடு சமூகத்தின் முன்னே தன்னை முன்னிறுத்திக் கொள்ளவும் வியூகரீதியாக இந்த முப்பெரும் விழா கூடுகையை ஒரு வாய்ப்பாக திமுக பயன்படுத்திக்கொள்வது உண்டு.
பலத்தை வெளிக்காட்டும் திமுகவின் முப்பெரும் விழா
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தில் இம்முறை எப்படியேனும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் எனும் இலக்கோடு அதிமுகவுடன் இணைந்து பிரம்மாண்ட கூட்டணியை அமைக்கும் உத்வேகத்தில் இருக்கிறது நாட்டை ஆளும் பாஜக. நடிகர் விஜய் தொடங்கியியிருக்கும் தவெகவுக்கு கூடும் கூட்டம், எல்லா தரப்பினரையும் ஆச்சரியத்தோடு பார்க்க வைத்திருக்கிறது. இத்தகு சூழலில், தமிழகத்தின் முதன்மை அரசியல் சக்தியான திமுக, மேலும் வலுவாக தன்னை முன்வைப்பதற்கு இந்த முப்பெரும் விழாவை ஒரு தருணமாக உருமாற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தின் 234 இடங்களில் கிட்டத்தட்ட 50 இடங்களைக் கொண்டிருக்கும் மேற்கு பிராந்தியம், இயல்பாகவே அதிமுக - பாஜக கூட்டணிக்கு செல்வாக்கான இடம். 2021 தேர்தலில் தமிழகத்தின் ஏனைய எல்லா பிராந்தியங்களிலும் பெருவாரி வெற்றியைப் பெற்ற திமுக கூட்டணியால், இங்கே 17 தொகுதிகளைத்தான் கைப்பற்ற முடிந்தது; மாறாக 33 தொகுதிகளை வென்றது அதிமுக கூட்டணி. இந்த பலத்தை தொடர்ந்து தக்கவைக்கும் வியூகத்தை உள்ளடக்கியே, இப்பகுதியைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் பதவி நோக்கி நகர்த்தியது பாஜக. இத்தகு சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக பிராந்திய தலைவர் செந்தில் பாலாஜி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மூவரும் மறைமுக காய்களை நகர்த்தும் மேற்கு பிராந்தியத்தில் தன்னுடைய பலத்தை வெளிக்காட்டும் வகையிலேயே, 2025 முப்பெரும் விழாவை கரூரில் நடத்துவதோடு, பொறுப்புகளை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அரை நூற்றாண்டாக திமுக, எதிர் அதிமுக என்று சென்றுகொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில், இடையில் நாங்களும் இருக்கிறோம் என்று இளைய கட்சியான தவெகவும்; கட்சியை வளர்த்தெடுக்க இதுவே தருணம் என்று பாஜகவும் இறங்கியுள்ள சூழலில், இன்றைய தினம் ஸ்டாலின் பேச்சு மிகுந்த கவனத்தோடு உற்றுநோக்கப்படுகிறது!