1 லட்சம் நாற்காலிகள்.. ரேம்ப்வுக்குப் பதில் சாலை.. கரூரில் களைகட்டும் திமுக முப்பெரும் விழா!
கரூர்- திருச்சி புறவழிச் சாலையில் உள்ள கோடங்கிபட்டியில் இன்று திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.
கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. திமுக சார்பில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு கரூர் - திருச்சி புறவழிச் சாலையில் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது, சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய திமுக முப்பெரும் விழா என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த விழாவிற்காக, 200 அடி நீள மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களிலிருந்து ஒரு லட்சம் பிளாஸ்டிக் நாற்காலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ரேம்ப்க்கு பதிலாக சுமார் 800 மீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்தச் சாலை வழியாக திறந்தவேனில் கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் பார்த்து கையசைத்தவாறு செல்லத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளதால், காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மத்திய மண்டல ஐஜி தலைமையில், 3 டிஐஜிக்கள், 12 எஸ்பிக்கள், 10 ஏடிஎஸ்பிக்கள், 31 டிஎஸ்பிக்கள், 46 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 2,900 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.