“அதிகமான தொகுதிதான் ஒதுக்குனாங்க... நான் தான்...” தொகுதிப் பங்கீடு குறித்து டிடிவி தினகரன்

பாஜக மற்றும் அமமுக இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அக்கட்சிக்கு இரு தொகுதிகளை பாஜக ஒப்பந்துள்ளது.
அமமுக - பாஜக கூட்டணி
அமமுக - பாஜக கூட்டணிpt web

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து கூட்டணிகளும் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாஜக பாமக இடையே நேற்று கூட்டணி கையெழுத்தான நிலையில், இன்று பாஜக அமமுக இடையே தொகுதிப்பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.

அமமுகவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்று தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயத்தில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தை அணுகி சட்டரீதியிலான நடவடிக்கைகளை அமமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே குக்கர் சின்னத்திலேயே அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதிப் பங்கீட்டிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “அமமுக போட்டியிடுவது எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜகவினர் சொன்னால்தான் சரியாக இருக்கும். அவர்களே வெளியிடுவார்கள். எங்கள் கட்சியினரிடம், தேர்தலில் போட்டியிட யார் யாரெல்லாம் விருப்பபடுகிறார்கள் என கேட்டபோது, 8 முதல் 9 தொகுதிகளில் தான் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பப்பட்டார்கள். அமமுக என்பது பிராந்திய கட்சி. எனவே எங்களது நிர்வாகிகள் தொண்டர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத்தான் விரும்பிகிறார்கள். 9 தொகுதிகளில் போட்டியிட விருப்பப்பட்டவர்களை அவர்களது பெயர்களோடு பாஜகவிடம் கொடுத்தேன்.

பாஜக எங்களுக்கு முதலில் அதிகமான தொகுதியை ஒதுக்கியது. நான் சொன்னேன், ‘கூட்டணி பலப்பட வேண்டும். அனைத்து கட்சிகளும் வரட்டும்’ என்றேன். கூட்டணிக் கட்சிகள் ஏதும் தொகுதிகள் கேட்டால் விட்டுக்கொடுங்கள் என்றார்கள். நானும் விட்டுத் தருவதாக சொன்னேன். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக இந்த தேர்தலில அமமுக தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக உழைக்கும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com