"திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து.. உதயநிதியை முதல்வராக்கும் கனவு நடக்காது" - நெல்லையில் அமித்ஷா!
நெல்லை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
நெல்லையில் பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
திமுகவை தாக்கி பேசினார் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்று மாலை நெல்லை வந்தார். பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற அவர், 'வரப்போகும் தேர்தலில் திமுக-வை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.-வின் வெற்றியை அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லையே என வருத்தம் தெரிவித்த அவர், மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் பாஜகவிற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் என்றும், அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக இருந்துள்ளனர்; அவர்கள் ஆட்சியாளர்களாகவும் இருக்க வேண்டுமா? 130-வது சட்டத்திருத்தத்தை ‘கறுப்பு சட்டம்’ என்கிறார் ஸ்டாலின். அதை நீங்கள் சொல்ல எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் நீங்கள் கறுப்பு நடவடிக்கைகளை செய்பவர்.
இந்த நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி, இங்கு நடைபெற்று வரும் திமுக-வின் ஆட்சிதான். சிவப்பு மணல் திருட்டு, டாஸ்மாக் ஊழல், போக்குவரத்து ஊழல், இலவச வேட்டி சேலையில் ஊழல் என்று இன்னும் ஏராளமான ஊழலை செய்கிறார்கள் இவர்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் 18% க்கு மேல் வாக்குகள் பெற்றிருந்தோம்; கூட்டணியான அதிமுக 21% வாங்கியிருந்தனர். இதிலேயே மிக எளிமையாக 39% வாக்குகள் நமக்கு வந்துவிடுகிறது. என்.டி.ஏ கூட்டணி, வெறும் அரசியல் கூட்டணியல்ல. தமிழ் மக்களை முன்னேற்றுவதற்கான கூட்டணி இது.
சோனியா காந்திக்கு ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவதே கனவு; அதேபோல திமுக-விற்கு உதயநிதியை முதல்வராக்குவதே கனவு. இந்த இரண்டுமே நடக்காது. இந்த இரு இடங்களிலுமே (பிரதமர் - முதல்வர்) என்.டி.ஏ. கூட்டணியே வெற்றிபெறும்.வரப்போகும் தேர்தலில் திமுக-வை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.-வின் வெற்றியை அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.