அமித் ஷா, ராகுல் காந்தி நாளை சென்னை வருகை.. சூடுபிடித்துள்ள அரசியல் களம்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர். மாலை 3.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு சென்று பரப்புரை மேற்கொள்கிறார். மாலை 6.10 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பும் அவர், விமான நிலையத்தில் மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பின், அங்கிருந்து அவர் டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.
இதற்கிடையே, காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடையும் ராகுல் காந்தி, அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பின், 12 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானத்தில், அவர் புதுச்சேரிக்கு செல்ல உள்ளார். அதன்பின், சென்னைக்கு அவர் வருவது தொடர்பாக எதுவும் திட்டமிடப்படவில்லை என கூறப்படுகிறது. இரு துருவத் தலைவர்களும் ஒரே நாளில் தமிழகம் வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இவர்களின் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

