”வேங்கைவயல் விவகாரம்; பட்டியலின மக்களுக்கு அநீதி இழைப்பு“ - அன்புமணி கண்டனம்!
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்த மனித குலத்தையும் இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், இது குறித்து முதலில் விசாரணையை தொடங்கிய வெள்ளனூர் காவல்துறையினர் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் சரியான திசையில் இந்த வழக்கை கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த சூழலில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு தமிழக அரசு மாற்றியது.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி 2025-ம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், வேங்கைவயல் வழக்கில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்தது அதே கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரும் தான் என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததது. சிபிசிஐடி வைத்த குற்றச்சாட்டுக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க மறுத்து இறுதியில் மாவட்ட நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்கு பின்பு வாக்களித்த வேங்கைவயல் கிராம மக்கள் வருகின்ற தேர்தலில் வாக்களிப்பார்களா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான், பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பட்டியலின மக்களுக்கு திமுக இழைத்த சமூக அநீதிகள் ஏராளம் என குறிப்பிட்டுள்ளார். திமுகவின் துரோகத்தை பட்டியலின மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அவர்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி, வரும் தேர்தலை புறக்கணிக்க வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறி உள்ளார்.

