மயிலாப்பூரில் சாலைவலம்.. உரை நிகழ்த்தாமல் திரும்பிய அமித்ஷா.. பாஜக தொண்டர்கள் ஏமாற்றம்!
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான், அக்கட்சியின் நிர்வாகிகள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பொதுக்கூட்டத்தில் ஈடுபடுவது அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்தை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், நேற்று கோவையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் தான், இன்று அதிமுக - பாஜக கூட்டணியை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக, நேற்று இரவு கோவை வந்த அவர், நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கினார். தொடர்ந்து, இன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், சாலை வலம் மற்றும் பரப்புரையில் ஈடுபட்டார். தொடர்ந்து, மதியம் 12 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, இன்று மாலை 6 மணி அளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் முன்பகுதியில் இருந்து வாகனம் மூலம், மாட வீதிகளில் சாலை வலம் வந்த அவருக்கு மயிலாட்டம், ஒயிலாட்டம், மேள-தாள வாத்தியங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மாடவீதிகளின் இரு வீதிகளில் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். அமித்ஷாவுடன் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக வேட்பாளர்கள் வளர்மதி மற்றும் ஆகியோரும் ஒரே வாகனத்தில் சென்றனர். மூவருக்கும் வாக்களிக்க வேண்டும் என அமித்ஷா கேட்டுக்கொண்டார். இறுதியில் அமித்ஷா பேசுவதாக இருந்த நிலையில் பேசாமலேயே அங்கிருந்து புறப்பட்டார். இதனால் பாஜக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

