மக்களவை தேர்தல் 2024 | தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, நிர்மலா சீதாராமன் இன்று தமிழ்நாடு வருகை
செய்தியாளர்: விக்னேஷ்முத்து
வரும் 19 ஆம்தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தை நோக்கி தேசியத்தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது. வரும் 13, 14 ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார். இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் பரப்பரைக்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் வர இருக்கிறார்.
காலை 10 மணி அளவில் ஓசூர் ராம்நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து சிதம்பரம் மற்றும் தஞ்சையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். நாளை நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்தும், கோவை வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி வேட்பாளரை ஆதரித்தும் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிக்கிறார்.
இதேபோன்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழகம் வருகிறார். மாலை 5.30 மணி அளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல் வாகன பேரணியாக சென்று பாஜக வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.