ஆம்பூர் | வீட்டின் பூட்டை உடைத்து மிளகாய் பொடியை தூவி ரூ.3 லட்சம் பணம் 5 சவரன் நகை கொள்ளை
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கட்டவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று சண்முகம் பணிக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி நிலத்திற்கு சென்றுள்ளார், இதனை அறிந்த மர்ம நபர்கள், சண்முகத்தின் வீட்டின் பூட்டை உடைத்து மிளகாய் பொடியை தூவிவிட்டு, பீரோவில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்,
அதனை தொடர்ந்து இரவு வீடு திரும்பிய சண்முகம் மற்றும் அவரது மனைவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டினுள் மிளகாய் பொடி கொட்டியிருப்பதும், பீரோவில் வைத்திருந்த 3 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது,
இதுகுறித்து சண்முகம், உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஆய்வு மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.