எஸ்.பி வேலுமணி அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா? “என்னென்றும் அதிமுககாரன்தான்” பதிவின் பின்னணி இதுதானா?

அதிமுக - பாஜக கூட்டணி முறிவை தொடர்ந்து, அதிமுகவுக்கு எதிராக எஸ்.பி வேலுமணியை பாஜக தலைமை பயன்படுத்திக்கொள்ளும் என்று பேசப்பட்ட நிலையில் ஒற்றை ட்வீட்டின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ்.பி வேலுமணி.
sp velumani
sp velumanifile image

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட நிலையில், இருதரப்பு தொண்டர்கள் குஷியில் கொண்டாடினாலும், கூட்டணியை தவறவிட்டுவிட்டோமே என்று பாஜக வருத்தத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. அண்ணா, ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுதான் கூட்டணி முறிவுக்கு காரணம் என்று அதிமுக கூறிவந்தது.

இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என்று கூறியதாலே கூட்டணி முறிந்ததாக தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பணன்.

sp velumani
அதிமுக - பாஜக இடையே முறிந்த கூட்டணி; ஓபிஎஸ் முன் உள்ள 5 வாய்ப்புகள் என்ன? - விரிவான அலசல்

கூட்டணி முறிந்தாலும், தலைமைக்கழக செயலாளர், கட்சியின் சட்டப்பேரவை கொறடா என்று அதிமுகவின் தற்போது முக்கிய முகமாக இருக்கும் எஸ்.பி வேலுமணியை தங்களுக்கு சாதகமாக பாஜக பயன்படுத்தும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இபிஎஸ்ஸுக்கு எதிராக எஸ்.பி வேலுமணியை பாஜக பயன்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன.

மகாராஷ்டிராவில் ஷிண்டேவை பயன்படுத்தி ஆட்சியை பிடித்ததைப் போல, தமிழ்நாட்டில் எஸ்.பி வேலுமணியை பயன்படுத்தி அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிடுவதாக பேசப்பட்டது. டெல்லி மேலிடத்துடன் எஸ்.பி வேலுமணி நெருக்கமாக இருப்பதே இந்த பேச்சு எழ காரணமாக பார்க்கப்படுகிறது.

sp velumani
"அதிமுக - பாஜக கூட்டணி" முறிவால் அண்ணாமலை நிலைகுலைந்துவிட்டார் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!

2006ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரான எஸ்.பி வேலுமணி, 2011, 2016 ஆட்சி காலங்களில் அமைச்சராக நீடித்து கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக மாறியுள்ளார். குறிப்பாக 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றிபெற வைத்து எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி. இது தொடர்ந்து, அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் முரண்பாடு ஏற்பட்டபோதெல்லாம், கூட்டணியை தொடரலாம் என்று வாதத்தை முன்வைத்துள்ளார் எஸ்.பி வேலுமணி.

மத்திய அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதாலும், பிரச்சனை வரும்போதெல்லாம் அவர்களை சென்று தனிமையில் சந்திப்பதாலும், தன் மீதான சொத்துக்குவிப்பு, ஊழல் புகார்களை சமாளிக்கவும் எஸ்.பி வேலுமணி பாஜக பக்கம் திரும்புவார் என்று பேசப்பட்டது.

இந்நிலையில், தான் என்றென்றும் இபிஎஸ் பக்கம்தான் என்பதை சமூகவலைதள பக்கத்தில் போட்டு சர்ச்சைக்கு முற்று வைத்துள்ளார் வேலுமணி. அதிமுகவின் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பழைய போட்டோவை பகிர்ந்து அவர் பதிவிட்டது தற்போது வைரலாகியுள்ளது.

எழுத்து: யுவராம் பரமசிவம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com