"அதிமுக - பாஜக கூட்டணி" முறிவால் அண்ணாமலை நிலைகுலைந்துவிட்டார் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!

பா.ஜ.கவின் இறுதி யாத்திரை தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பா.ஜ.கவை சவக்குழிக்குள் அனுப்பும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன் File Image

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வாச்சாத்தி வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உதிரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளாக இந்த வழக்கை நடத்தி வருகின்றோம்

மாவட்ட ஆட்சியர் , எஸ்.பி ஆகியோர் மீதும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.எம் 30 ஆண்டுகளாக இந்த வழக்கை நடத்தி வருகின்றோம். இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கக் கூடியது.

ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சாரகராக இருப்பவர் ஆளுநர்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை விடுதலை போராட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை. மகாத்மா காந்தி கொலை செய்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரகராக இருப்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாளில் விடுதலை போராட்ட தலைவர்களுக்கு விழா நடத்த ஆளுநருக்கு என்ன தகுதி உள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.கவின் இறுதி யாத்திரை! 

பா.ஜ.கவை சவக்குழிக்குள் அனுப்பும் பணியை அண்ணாமலை செய்கின்றார். மத்திய அரசின் 9 ஆண்டுகளில் தொழில், விவசாயம், தனிநபர் வருவாய் என எதுவும் உயரவில்லை. பா.ஜ.கவின் கொள்கையால் தொழில்கள் பாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டியை கொண்டு வந்ததே பா.ஜ.க சிறு, குறு தொழில் பாதிப்பிற்கும் முடக்கத்துக்கும் காரணம்.

75000 பேருக்குப் பணி வழங்கியதாகப் பிரதமர் அறிவிக்கின்றார். கோடிக்கணக்கானோர் இருக்கும் நாட்டில் இது குறைவான எண்ணிக்கை.

அண்ணாமலை vs  எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை vs எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க பந்த் நடத்துவதற்குக் கர்நாடக அரசு அடிபணியக் கூடாது!

விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். டெல்டா மாவட்டங்களில் விரைவில் பந்த் போராட்டம் நடத்துவோம், விரைவில் விவசாயச் சங்கத் தலைவர்கள் அறிவிப்பார்கள். அரசியல் ஆதாயத்துக்காகத் தண்ணீர் கொடுக்கக் கூடாது எனக் கர்நாடகாவில் பா.ஜ.க பந்த் நடத்துவதற்குக் கர்நாடக அரசு அடிபணியக் கூடாது.

நில அபகரிப்பில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை தேவை!

தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு இருப்பவர்கள் நிலங்களை அபகரித்து வைத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம், பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி ஆகியோர் அபகரித்து இருப்பதும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அதிமுகவின் அதிரடி முடிவால் பா.ஜ.கவினர் நிலை குலைந்துவிட்டனர்

கூட்டணி குறித்து அதிமுக கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பா.ஜ.கவினர் நிலை குலைந்துவிட்டனர். அதனால் தான் அண்ணாமலை பேசாமல் இருக்கிறார். அ.தி.மு.க , அண்ணாமலை பேச்சை மட்டுமே வைத்து விலகி இருப்பது போதுமானதா? மற்ற விவகாரங்களில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன?” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com