S.I.R | இறந்ததாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்; ஆட்சியரிடம் நாதக வேட்பாளர் வாக்குவாதம்
சிவகங்கை மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து உயிருடன் இருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயர் “இறந்தவர்கள்” எனக் கூறி நீக்கம் செய்யப்பட்டத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரை பின் தொடர்ந்து சென்று நாதக பெண் வேட்பாளர் கடுமையான வாக்குவாதம் செய்தார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர். - Special Intensive Revision - SIR) கடந்த மாதம் 4ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர். பல சர்ச்சைகளுக்கு உள்ளானதால் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இதனை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி டிசம்பர் 9-ம்தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாட்டில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்து இருந்தது.
இந்நிலையில், வாக்காளர் திருத்தப் பணிகள் தொடர்பாக அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது, சிவகங்கை சட்டமன்றத் தொகுதி 2026 தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா ரமேஷ் மற்றும் அவரது கணவர் ரமேஷ் என்பவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் உயிருடன் இருந்தபோதும், “இறந்தவர்கள்” எனக் குறிப்பிட்டு அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து எஸ்.ஐ.ஆர் படிவமும் பூர்த்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவரத்தை எதிர்த்து, இந்துஜா ரமேஷ் தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து, தம்பதியரும் அதிகாரிகளும் இடையே வாக்குவாதம் அதிகரித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

